திருக்கோஷ்டியூர் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற பக்தர்கள் வேண்டுகோள்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெற்ப உற்சவம் 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோயிலில் இந்த ஆண்டிற்கான மாசி மக தெப்ப உற்சவ விழா கடந்த பிப். 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிப்.24ம் தேதி இரவு தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி கடந்த ஒரு வாரமாக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வைரவன்பட்டியில் பகுதியில் அமைந்துள்ள ஜோசியர் தெப்பக்குளத்தை சுற்றியும் அகல் விளக்குகள் ஏற்றி தங்களது நேற்று கடனை செலுத்தியும், பிரார்த்தனையை வலியுறுத்தியும் வழிபாடு மேற்கொண்டனர்.

இத்திருவிழாவையொட்டி திருக்கோஷ்டியூர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை திருப்புத்தூர் சிவகங்கை சாலையில் இருபுறமும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டது. இதற்கு கோயில் நிர்வாகத்தின் மூலம், கடைகள் அமைக்க பணம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெளியூர்களிலிருந்து கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் இத்திருவிழாவிற்கு வந்தவர்களிடம் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த தெப்ப திருவிழா முடிந்து இரண்டு நாட்களுக்கு மேலாகியம் வெளியூர்களிலிருந்து தெப்பக்குளம் பகுதிக்கு வந்து பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் இத்திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்து வந்து பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். இவர்கள் விளக்கேற்றி விட்டுச்சென்ற அகல் விளக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், மஞ்சள்நிற துணிகள் உள்ளிட்ட குப்பைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாகியும் அப்புறப்படுத்தாததால் தற்போது வரும் பக்தர்கள் அந்த இடங்களில் லேசாக சுத்தம் செய்துவிட்டு விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

மேலும் குளத்தைச் சுற்றி குப்பைகள் நிறைந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளலாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இப்பகுதியில் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்கோஷ்டியூர் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற பக்தர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: