ஜல்லடியன்பேட்டை பகுதியில் ₹92.76 கோடியில் பாதாள சாக்கடை பணி: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ஜல்லடியன்பேட்டை பகுதியில் ₹92.76 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி, நடைபெற்று வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நெம்மேலியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற 150 எம்.எல்.டி உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய தொடக்க விழாவில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ₹92.76 கோடி மதிப்பீட்டில், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியன்பேட்டை பகுதியில், விரிவான பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதனடிப்படையில், நேற்று ஜல்லடியன்பேட்டையில் 33.38 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் 9.92 கி.மீ நீளத்திற்கு விசைக்குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், 2 எண்ணிக்கையிலான கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், 6 கழிவுநீர் உந்துநிலையங்கள், 6 இயந்திர நுழைவாயில் உந்து நிலையங்கள், 2 இடைமறிப்பு மற்றும் திசை திருப்புதலுக்கான உந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும், கழிவுநீர் கசடுகள், கழிவுநீர் வழிந்தோடல் ஏற்படாத வகையில் 1,361 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 2,844 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இத்திட்ட பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு 3,439 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 23,700 பொதுமக்கள் பயன்பெறுவர், என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

The post ஜல்லடியன்பேட்டை பகுதியில் ₹92.76 கோடியில் பாதாள சாக்கடை பணி: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: