தாய்மொழி கட்டாயம் என்ற கொள்கையில் நான் உறுதி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விருப்பம்

பெங்களூரு: சமூகநீதியின் குரலாக ஒலிக்க ஞானபீட விருது பெற்ற தேசியகவிஞர் குவெம்பு சொன்னதுபோல் ஆங்கில கல்வியுடன் தாய்மொழி கட்டாயம் என்ற கருத்தை நான் முழுமனதுடன் ஏற்றுகொள்வதாக கர்நாடக உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா தெரிவித்தார். கர்நாடக மாநில உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள அஞ்சாரியாவுக்கு கர்நாடக மாநில வக்கீல் சங்கம் சார்பில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்புக்கு நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி பேசும்போது, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலம் இடையில் நெருங்கிய உறவு உள்ளது. கர்நாடக மண்ணை ஆட்சி நடத்திய சாளுக்கிய மன்னர், குஜராத்திலும் தனது ஆட்சியை கொடுத்துள்ளார். தேசிய கவிஞர் குவெம்பு மற்றும் குஜராத் மாநில கவிஞர் உமாசங்கர் ஜோஷி இருவரும் ஒரே ஆண்டில் ஞானபீட விருது பெற்றனர். சமூகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் முதன்மை இடத்தில் உள்ள கர்நாடக மாநிலம், பல்வேறு இசை கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளை பெற்றெடுத்துள்ளது. இதே உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கிளை இருக்கும் தார்வாரில் ஹிந்துஸ்தானி இசை கலைஞர் பண்டித் பீம்சன்ஜோஷி, குமார் கந்தர்வா உள்பட பலர் பிறந்துள்ளனர்.

நீதித்துறை நமது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக உள்ளது. பல வழிகளில் வஞ்சிக்கப்படும் மக்களின் கடைசி நம்பிக்கையும் நீதிமன்றம் மட்டுமே. நீதி என்பது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக இல்லாமல் அனைத்து வகுப்பினருக்கும் சமநீதி வழங்கும் வகையில் இருக்க வேண்டும். நமது அரசமைப்பு சட்டத்தை ஒவ்வொருவரும் பாதுகாத்து போற்றி வணங்குவதுடன், அதில் வழங்கியுள்ள உரிமைகள் கடைகோடி சாமானியருக்கும் கிடைக்க வேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்க முடியும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது நமது அரசமைப்பின் முக்கிய குறிகோளாக உள்ளதை நீதித்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம் முன் வரும் வழக்கை பொறுமையாக விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும். நீதிபதிகள் தவறு செய்தால், அது நீதிதுறைக்கு களங்கம் ஏற்படுத்தும். அதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்ககூடாது.

கர்நாடக மாநிலத்திற்கும் எனக்கும் தொடர்புள்ளது. நான் குஜராத்தில் வக்கீல் தொழில் ஆரம்பித்தபோது, நவீன் சந்திரா லே பவுன்டேஷன் சார்பில் பேலோஷிப் கிடைத்தது. அதை எனக்கு அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கன்னடர் எம்.என்.வெங்கடாசலய்யா வழங்கினார். குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டபோது, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எம்.வீரப்பமொய்லி, ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்தார். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.எச்.வகேலா, குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, அவரது அமர்வில் நானும் நீதிபதியாக இருந்தேன்.

சமூகநீதி, தாய்மொழி என்பது ஒவ்வொருவரின் இரு கண்களை போன்றது. இந்த விஷயத்தில் ஆங்கில கல்வியுடன் தாய்மொழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று கன்னட தேசியகவிஞர் குவெம்புவின் நிலைப்பாட்டை நானும் முழு மனதுடன் ஏற்று கொள்கிறேன். தாய்மொழி கல்வி ஒவ்வொருவரின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியம். நாம் பல மொழிகள் படித்து கற்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக உள்ளேன். கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். எனது பணி காலத்தில் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

The post தாய்மொழி கட்டாயம் என்ற கொள்கையில் நான் உறுதி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: