நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடு

*மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்

மானாமதுரை : மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வன்னிக்குடி கரிசல்குளம் அருகே ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இதனால் நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. சுகாதாரத் துறையினர் மருத்துவ கழிவுகளை அகற்றுவதோடு கொட்டியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.மானாமதுரை நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தாயமங்கலம் ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மட்கும் குப்பை மட்காத குப்பையாக தரம் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு வருகிறது. மட்காத குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கும், பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலைகளுக்கும் அனுப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வன்னிக்குடி கரிசல்குளம் அருகே ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வன்னிக்குடி கரிசல்குளம் பகுதிகள், மேலப்பசாலை மேம்பாலம் அருகில் ஆகிய சாலை ஓரங்களில் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள், மருந்துகள், காயங்களை தூய்மைப்படுத்திய பஞ்சுகள், காலாவதியான மாத்திரைகள் ஆகியவை கொட்டப்படுகின்றன.

சாலையோரத்தில் இதுபோன்று உயிரி மருத்துவ கழிவுகளை, ரசாயன குப்பைகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே மருத்துவ க்கழிவுகளை கொட்டும் ஆஸ்பத்திரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில், மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வன்னிக்குடி கரிசல்குளம் அருகே ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. கிராமங்களில் உள்ள சிறுவர்கள் இந்த மருத்துவ கழிவுகளில் கிடப்பதை வெறும் கைகளால் எடுத்தால் நோய் தொற்று ஏற்படும். அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இதனால் நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. சுகாதாரத் துறையினர் மருத்துவ கழிவுகளை அகற்றுவதோடு கொட்டியவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதாரக்கேடு appeared first on Dinakaran.

Related Stories: