விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நெல்லை: விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். நெல்லை வண்ணார்பேட்டையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் இணைந்தது, அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எனக்கும், சட்டப்பேரவை முதன்மை செயலருக்கும் இணைய வழியில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில் விஜயதரணி எம்எல்ஏ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், மாற்று கட்சியான பாஜவில் தற்போது இணைந்துள்ளார். எனவே அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் விஜயதரணி எம்எல்ஏவும் எனக்கு இணைய வழியில் அனுப்பிய கடிதத்தில், பாஜ கட்சியில் தான் இணைந்ததால், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்காக சட்டப்பேரவை விதி 21- எப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து, அவர் கைப்பட எழுதி எனக்கும், முதன்மை செயலருக்கும் அனுப்பி இருந்தார். மேலும் தொலைபேசியில் என்னை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தொடர்பு கொண்டு, காங்கிரசிலிருந்து விலகி, பாஜவில் இணைந்துள்ளதாகவும், எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

அக்கடிதத்தை தனது கைப்பட எழுதியுள்ளதாகவும் உறுதியளித்தார். நான் அவரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தேன். அவரது படிவத்தை சரி பார்த்ததில் அதில் உரிய தகவல்கள் இருப்பதால், அவரது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இனிமேல் தேர்தல் ஆணையம் உள்பட அமைப்புகளுக்கு இதுகுறித்த தகவலை அனுப்பி வைப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: