ஊத்துக்காடு ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற எல்லையம்மன் கோயில், மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.  இந்நிலையில், இந்த ஊராட்சியின் மையப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளன.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இக்கட்டிடம் முழுவதும் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகின்றன. இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது.

இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது கட்டிடம் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுவதால் நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்வதற்கு அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சூழலில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த கர்ப்பிணி பெண்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.

இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மேம்படுத்தி 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி தந்தால், இப்பகுதி சுற்றுவட்டார கிராம மக்களுக்கும் இங்குள்ள பிரதான கோயில்களுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்கின்றனர்.
இதுபோன்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டு, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஊத்துக்காடு ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: