கிண்டியில் வாகன போக்குவரத்துக்கு 5 பர்லாங் சாலை ஒருவழி பாதையாக திறப்பு

ஆலந்தூர்: கிண்டியில் சுமார் 40 அடி பள்ளத்தில் விழுந்து 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த 5 பர்லாங் சாலை நேற்று ஒருவழிப் பாதையாக திறக்கப்பட்டது. சென்னை வேளச்சேரி பிரதான சாலை மற்றும் கிண்டி 5 பர்லாங் சாலையை இணைக்கும் இடத்தில் வாகனங்களுக்கான காஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வந்தது. இதன் அருகே புதிதாக கட்டப்படும் 7 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்காக தனியார் கட்டுமான நிறுவனத்தில் சுமார் 40 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக, கிண்டி 5 பர்லாங் சாலையில் அடித்து வரப்பட்ட மழைநீர் பள்ளத்தில் நிறைந்திருந்தது.

இதில் மண் சரிவு ஏற்பட்டதில், அருகில் இருந்த காஸ் நிரப்பும் நிலையத்தின் அலுவலக அறை மற்றும் கழிவறை ஆகியவை பள்ளத்துக்குள் விழுந்தது. இதில், அங்கு பணியில் இருந்த 4 ஊழியர்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் இன்ஜினியர் ஜெயசீலன் என்பவரும் புதைகுழிக்குள் விழுந்தனர். குழிக்குள் விழுந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் இன்ஜினியர் ஜெயசீலன், காஸ் நிரப்பும் ஊழியர் நரேஷ் ஆகிய இருவரின் சடலங்களும் 4 நாட்கள் தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது.மேலும், தனியார் கட்டுமான பகுதியில் தோண் டப்பட்ட சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் சீரமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு காலதாமதமானது. இதனால் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் அப்பகுதி சாலை போக்குவரத்தை தடை செய்து மூடப்பட்டது.

இதையடுத்து கிண்டியிலிருந்து அண்ணாசாலை, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய 5 பர்லாங் சாலை மூடப்பட்டதால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் 5 பர்லாங் சாலையை மீண்டும் வாகன போக்குவரத்துக்கு திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து 5 பர்லாங் சாலையை செப்பனிட்டு, இருவழிப் பாதையை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நேற்று பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தகடுகள் அமைத்து, வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் ஒருவழிப் பாதை மட்டும் வாகன போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
இதனால் தற்போது கிண்டி ஹால்டா பகுதியில் வாகன நெரிசல் குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கிண்டியில் வாகன போக்குவரத்துக்கு 5 பர்லாங் சாலை ஒருவழி பாதையாக திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: