கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்

தேன்கனிக்கோட்டை: கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அலசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்ன திம்மராயன் (42). மனைவி, 2 மகன், 2 மகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்புறம் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரை தாக்கி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களில் ஒற்றை காட்டு யானைகள் தாக்கி அடுத்தடுத்து 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதேபோல பலர் பலத்த காயமடைந்துள்ளனர். தொடர் தாக்குதலால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால், பலியான விவசாயி குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். உயிரிழந்த சின்ன திம்மராயப்பா குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ₹50 ஆயிரம் நிவாரணத் தொகை அவரது மனைவி வரலட்சுமியிடம் வழங்கப்பட்டது.

The post கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: