தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

சென்னை: திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை:
தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இன்புளுயன்சா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்பான மருந்து மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பதையும், அதனை தயார் நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பு தொடர்பான செயல்பாடு குறித்து மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். குடிநீரில் போதுமான அளவு குளோரினேசன் உள்ளதை கண்காணிக்க வேண்டும். டெங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று எதனால் டெங்கு பாதிப்பு எற்பட்டது என்பதை ஆய்வு செய்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல் குறித்து தினசரி அறிக்கையை சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: