டெண்டர் விடாமல் திட்ட பணிகள் செய்யக்கூடாது

 

கோவை, பிப்.23: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படை தன்மை தேவை. மாநகராட்சி அலுவலர்கள் சிலர் தங்கள் வீடுகளில் டெண்டர் சம்பந்தமான பைல்களை மறைத்து யாரும் பார்க்க விடாமல் தடுக்கிறார்கள். டெண்டர் திட்ட மதிப்பீடு, அளவீடு உள்ளிட்ட விவரங்களை ஒப்பந்ததாரர்கள் பார்க்க விடுவதில்லை.

டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டவிதிகளின்படி முறையாக டெண்டர் விட்டுதான் பணிகளை நடத்த வேண்டும். ஆனால், அட்வான்ஸ் ஒர்க் என முன்கூட்டியே பணிகளை செய்து முடித்து விடுகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் அவசரப்பட்டு அப்படி எந்த வேலையும் செய்யக்கூடாது. டெண்டர் விடாமல் அவசர அவசிய பணிகளை செய்ய தனி பிரிவு சட்ட விதிமுறைகள் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோவை 100 அடி ரோட்டில் இதுபோல் அட்வான்ஸ் ஒர்க் என டெண்டர் விடாமல் ரோடு பணி செய்யப்பட்டது.

அப்போது, இந்த விவகாரம் பெரிய பிரச்னையாகி மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இதேபோல் அதிகளவு டெண்டர் விடாமல் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. திட்டப் பணிகளை அதற்குரிய பிரிவுகளில் முறையாக அனுமதி பெற்று செய்ய வேண்டும். அனுமதியின்றி பணிகளை அட்வான்ஸ் ஒர்க் என செய்து அந்த விபரங்கள் போட்டோ ஆதாரங்களுடன் வெளியானால் திட்டப் பணிகள் செய்தவர் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகளும் விஜிலென்ஸ் விசாரணைக்கு ஆளாக நேரிடும்.

முன்கூட்டியே திட்டப்பணிகள் செய்ய வேண்டும் என்றால் லிமிடெட் டெண்டர் என்ற வகையில் பெறலாம். அதற்கு பல்வேறு சட்ட விதிகள் இருக்கிறது. வழக்கமான டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டால் பிரச்னைகள் ஏற்படும். இது தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள், நகராட்சி நிர்வாக கமிஷனர் உட்பட பல்வேறு துறைகளுக்கு புகார்கள் சென்றால் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

The post டெண்டர் விடாமல் திட்ட பணிகள் செய்யக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: