‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணியினை கலெக்டர் ஆய்வு: பிடிஒ ஆபீசில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

மதுராந்தகம், பிப்.22: மதுராந்தகத்தில் நடைபெற்ற, ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணியினை கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையினை ஆய்வு செய்தார். அப்போது, ஆலை செயல்படும் விதம், சர்க்கரை உற்பத்தி, தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கருங்குழி பேரூராட்சியில் தமிழக அளவில் முதன்முதலாக தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் கழிவுநீர் கசடு அகற்றும் மேம்பாட்டு நிலையத்தை பார்வையிட்டார்.

மேலும், அந்த நிலையத்தின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார். அப்போது, அங்கு வந்திருந்த விவசாயிகள் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், பாசன கால்வாய்களை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கே வெளி நோயாளிகளிடமும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் சுகாதாரத்தை பேணிக் காப்பதில் அனைவரும் கவனம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி அருகே உள்ள சமணர் படுகை மற்றும் அங்குள்ள இருளர் காலனி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக அவர் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வேறொரு நிகழ்ச்சிக்காக புறப்பட இருந்த நேரத்தில், அங்கே காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் தங்களின் கோரிக்கை மனுக்களை பெறாமல் செல்லக்கூடாது எனவும் கூறி அவரது கார் முன்பாக திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

The post ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணியினை கலெக்டர் ஆய்வு: பிடிஒ ஆபீசில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Related Stories: