நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ என்ற திட்டத்தை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் திறனை பரிசோதிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்ட தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் மொழித்திறன், கணிதத் திறன், சிந்திக்கும் ஆற்றல் உள்ளிட்டவற்றின் கீழ் கையடக்க கணினி வழியே 50 மதிப்பெண்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் திறனை அறிந்து அதில் மாணவர்களை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இந்த ஒலிம்பியாட் திட்டம் பரிசோதனை முயற்சியாக திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பள்ளியில் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

The post நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: