ராஜஸ்தான் மற்றும் மபியில் இருந்து சோனியா காந்தி, எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு: குஜராத்தில் ஜே.பி. நட்டா வெற்றி

புதுடெல்லி: 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, காலியாகும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலும், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத் மாநிலத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களில் போட்டியின்றி தேர்வானவர்கள் குறித்த பட்டியலை தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானார். 77 வயதாகும் சோனியா காந்தி இதுவரை 5 முறை மக்களவை எம்பியாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1999ல் காங்கிரஸ் தலைவராக அவர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகி உள்ளார்.

உடல் நிலை காரணமாக சோனியா காந்தி இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது மாநிலங்களவை எம்பி பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு அவரது இடத்தில் சோனியா தேர்வாகி உள்ளார். ராஜஸ்தானில் 10 எம்பி இடங்களில் சோனியா உட்பட காங்கிரஸ் சார்பில் 6 பேரும், பாஜ சார்பில் 4 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.இதே போல, மத்தியபிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட 4 பாஜ வேட்பாளர்களும், ஒரு காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். குஜராத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட 4 பாஜ வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர். ஒடிசா மாநிலத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் 2 பிஜூ ஜனதா தள வேட்பாளர்கள் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டனர்.

The post ராஜஸ்தான் மற்றும் மபியில் இருந்து சோனியா காந்தி, எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு: குஜராத்தில் ஜே.பி. நட்டா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: