டிட்டோ ஜேக் உண்ணாவிரதம்: 2000 ஆசிரியர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜேக்) மாநில அமைப்பின் சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த 2000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு என்னும் டிட்டோ ஜேக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை அண்ணா சாலை அருகில் உள்ள காயிதேமில்லத் மணி மண்டபம் அருகில் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர்.

இதில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், ஜெஎஸ்ஆர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்களின் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், ஆசிரியர்கள் என 2000 பேர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் கூறியதாவது: டிட்டோஜேக் சார்பில் 31 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளிக் கல்விஅமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளில் 12 அம்ச கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்தனர். அவற்றுக்கு அரசாணை வெளியிட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி அமைத்து வெளியிட்டுள்ள எண் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடப்பதால் முதல்வரின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் அறப்போராட்டத்தை நடத்துகிறோம்.

* சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். 2009 மே வரை சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிகமான சம்பளமும், அதே ஆண்டில் ஜூன் 1ம் தேதி முதல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது என்றும், இந்த முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் ராபர்ட் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்தனர்.

The post டிட்டோ ஜேக் உண்ணாவிரதம்: 2000 ஆசிரியர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: