ஈரோடு மணிக்கூண்டு அருகே அதிகாலை சந்தைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் தடை: வியாபாரிகள் அதிருப்தி

 

ஈரோடு, பிப். 19: ஈரோடு மணிக்கூண்டு அருகே அதிகாலை நடக்கும் சந்தைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்ததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர். ஈரோடு மாநகரில் கடை வீதி என்று அழைக்கப்படும் பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரையிலும் மற்றும் நேதாஜி சாலை, ஆர்கேவி சாலைகளின் இருபுறங்களிலும் சாலையோர வியாபாரிகளாலும், வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்களாலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

மேலும், பாதசாரிகளான பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின் பேரிலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தற்போது, சாலையோர ஆக்கிரமிப்புகள் 70 சதவீதம் வரை அகற்றப்பட்டுள்ளதால், சாலைகள் விசாலமாக காணப்படுகிறது. இதில், ஈரோடு மணிக்கூண்டு அருகே நேதாஜி சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை சாலையோரம் பாத்திரக்கடை, துணிக்கடை, செப்பல் கடை, பழைய எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் கடை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படும்.

இந்நிலையில், இந்த வாராந்திர சந்தை கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று தடை விதித்தனர். கடைகள் போட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை கடை நடத்துகிறோம். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு செய்வது கிடையாது.

நாங்கள் கடை போட அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள், மாநகராட்சி ஆணையாளரிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளித்து, அவரது அனுமதியளித்தால், கடை போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதன்பேரில், நேற்று வியாபாரிகள் கடை போடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஈரோடு மணிக்கூண்டு அருகே அதிகாலை சந்தைக்கும் மாநகராட்சி அதிகாரிகள் தடை: வியாபாரிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: