ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார் எடப்பாடி ஆவின் தலைவராக இருந்தபோது பால், நெய் கடத்தி பல ஊழல்கள் செய்தார்

* ரூ.40 லட்சம் மோசடி புகார் அளித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாஜி நிர்வாகி பகீர்

* பினாமியாக உள்ள மாவட்ட செயலாளரை நீக்க திராணி, தெம்பு இருக்கா என சரமாரி கேள்வி

சேலம்: எடப்பாடி பழனிசாமியால் 2 மாவட்ட செயலாளரை நீக்குவதற்கு கூட திராணி கிடையாது என, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாஜி ஒன்றிய நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் தன்னிடம் தனது மருமகன் மற்றும் தெரிந்தவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் வாங்கி சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் மோசடி செய்ததாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வெங்கடாஜலம் மீது புகார் தெரிவித்த ஏ.வி.ராஜூவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில், ஏ.வி.ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. கட்சியின் சட்ட திட்டங்கள் தெரியாமல், பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது. கட்சியின் பொது செயலாளராக அவர் பதவியேற்க, பொது குழு உறுப்பினரான நான் கையெழுத்து போட்டேன்.

பொது செயலாளரான பிறகு எம்ஜிஆர், ஜெயலிலதாவை விட தன்னை பெரியவர் என எடப்பாடி பழனிசாமி நினைத்து கொண்டிருக்கிறார். பணத்தோடு வரும் முன்னாள் அமைச்சர்களை மட்டுமே அவர் சந்திக்கிறார். ஆனால் தொண்டர்களை சந்திப்பதில்லை. எங்களை போன்றோர் கொடுக்கும் புகார்களையும் விசாரிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி, கடந்த 1991-1996ம் ஆண்டு சேலம் ஆவின் பால் ஒன்றிய தலைவராக இருந்த போது, நான் இயக்குனராக இருந்தேன். அப்போது எவ்வளவு ஊழல் செய்துள்ளார் என்பது எனக்கு தெரியும். பால் பண்ணையில் இருந்து பாலை கடத்தியது, நெய்யை கடத்தியது உள்ளிட்ட அவர் செய்த ஊழல்கள் அனைத்தும் எனக்கு தெரியும்.

வெறும் 300 சதுர அடி சொத்து வைத்திருந்த மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருப்பது குறித்தும், அரசு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றி வருவதாகவும், கடந்த 2022ம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக தான், ஒரு மாதத்திற்கு முன்பாகவே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன். ஆனாலும், இதுவரை வெங்கடாசலம் மீது நடவடிக்கை இல்லை. வெங்கடாசலம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்து பட்டியலை வைத்து, விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அலுவலகத்திற்கும் புகார் தெரிவிக்க உள்ளேன்.

அவர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரூ.1.74 கோடியும், 2021ம் ஆண்டு ரூ.2.63 கோடியும் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது ஆயிரம் கோடிக்கு சொத்து இருப்பது பற்றி வழக்கு தொடர்வேன். ஒருவேளை அவர் எடப்பாடிக்கு பினாமியாக இருக்கலாம். என்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடியால், 2 மாவட்ட செயலாளரை கூட நீக்க முடியாது. அதற்கு திராணி, தெம்பு இருக்கிறதா?, அவ்வாறு நீக்கினால் அவரை கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள். எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடியை செலவழிக்க அவர் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

* வெறும் 300 சதுர அடி சொத்து வைத்திருந்த மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருப்பது குறித்தும், அரசு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ஏமாற்றி வருவதாகவும், கடந்த 2022ம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* என்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடியால், 2 மாவட்ட செயலாளரை கூட நீக்க முடியாது. அதற்கு திராணி, தெம்பு இருக்கிறதா?, அவ்வாறு நீக்கினால் அவரை கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள்.

* எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம் ரூ.4 ஆயிரம் கோடியை செலவழிக்க அவர் தயாராக உள்ளார்.

* பெண்களுக்கு அதிமுகவில் பாதுகாப்பு இல்லை: பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக இணை செயலாளர் மாலதி கூறுகையில், ‘தற்போது அதிமுகவில் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை. கட்சி பணிக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை என மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலத்திடம் கேட்டால், என்னை வேறு சிலரோடு தவறாக சித்தரித்து பேசுகிறார். பெண்களுக்கு அதிமுகவில் மரியாதையும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.  எனவே, கட்சியில் இருந்து விலகுவதாக, நானும் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன்,’ என்றார்.

சேலம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தினேஷ்(எ) முனியப்பன் கூறுகையில், ‘கட்சிக்காக பல வழிகளில் நாங்கள் உழைத்து வருகிறோம். ஆனால், உழைக்கிறவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கூறினால், அவர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக வெங்கடாசலம் செயல்படுவதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயாது. எனவே தான், நாங்கள் கட்சியில் இருந்து விலக உள்ளோம்,’ என்றார்.

* அதிமுகவில் சேர்ந்த நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்க…
மாஜி நிர்வாகி ஏ.வி.ராஜூ கூறுகையில், ‘அதிமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூவத்தூரில் நடிகைகளை அழைத்து கூத்தடித்தது எல்லாம் எனக்கு தெரியும். தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிமுகவில் சி.வி சண்முகத்துக்கு தான், பொது செயலாளருக்கு உண்டான அனைத்து தகுதியும் இருக்கிறது. சேலம் மேற்கு ஒன்றியத்தில் அனைத்து நிர்வாகிகளும், விரைவில் கட்சியில் இருந்து விலகுவார்கள். நாங்கள் அதிமுகவின் உண்மையான விசுவாசிகள். இதனால் எந்த கட்சிக்கும் செல்லமாட்டோம்’. என்றார்.

The post ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார் எடப்பாடி ஆவின் தலைவராக இருந்தபோது பால், நெய் கடத்தி பல ஊழல்கள் செய்தார் appeared first on Dinakaran.

Related Stories: