மூன்று லிங்க வழிபாடு

மூன்று என்னும் எண் சமய வழிபாட்டில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாகச் சிவ வழிபாட்டில் மூன்று என்ற எண் தனியிடம் பெற்றுள்ளது. சிவபெருமான் முக்கண்ணன், மும்மதில் எரித்தவன். மூவிலை வேலான திரிசூலத்தை உடையவன். மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்தவன். முத்தொழில் நடத்துபவன், மூவராலும் தொழப்படுபவன் என்று மூன்றின் பெயரால் திரும்பத் திரும்பப் போற்றப்படுகிறான். அவன் மூன்று காலங்களாக இருக்கின்றான். அதைக் குறிக்கும் வகையில் திரி லிங்கமாக மூன்று லிங்கங்களை வைத்து வழிபடுகின்றனர். அவற்றைப் பூதலிங்கம், பௌஷ்யலிங்கம், வர்த்தமான லிங்கம் என்றழைக்கின்றனர். பூதம் என்பது கடந்த காலத்தையும், வர்த்தமானம் என்பது நிகழ்காலத்தையும், பௌஷ்யம் என்பது எதிர்காலத்தையும் குறிக்கும் சொற்களாகும்.

காலங்களைக் கடந்து காலாதீனாக விளங்கும் சிவபெருமான் முக்காலங்களாகவும் இருக்கிறான்.அப்பர் சுவாமிகள் சிவனடிக் கீழ் கூடிமுத்தி பெற்ற திருப்புகலூர் ஆலயத்தில் மூன்று காலங்களைக் குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்கள் தனித்தனியே பெரிய சந்நதிகளில் வைத்து வழிபடப் படுகின்றன. இவை முறையே பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர் பௌஷ்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றன. (இந்த மூன்று லிங்கங்களுடன் பாரத்வாஜேஸ்வரர், அக்னீஸ்வரர் சந்நதிகளைச் சேர்த்து, இது பஞ்சலிங்கத் தலமாகப் போற்றப்படுகிறது.)அவன் பூமி, ஆகாயம், பாதாளம் ஆகிய மூன்றிலும் நிறைந்துள்ளான். இந்த மூன்று நிலைகளையும் குறிக்கும் திருத்தலமாகத் திருவாரூர் விளங்குகிறது. இத்தலத்தில் சிவபெருமான் பூமீசனாக வன்மீகநாதர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். வன்மீகம் என்பது புற்றைக் குறிக்கும் சொல்லாகும். தூய மண்ணால் ஆன புற்றுக்குள் உறைவதால் இறைவன் வன்மீகநாதன் என்றழைக்கப்படுகின்றார்.

இவருடன் ஆகாய மண்டலத்தில் வீற்றிருப்பதைக் குறிக்கும் வகையில் அமைந்த அனந்தேசமும், பாதாளத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த ஆடகேசமும் பாதாளத்திலிருப்பதைக் குறிக்கும் வகையில் அமைந்த ஆடகேஉள்ளன.அனந்த புவனம் என்பது உலகின் உச்சியில் உள்ளது, இங்கு அனந்தர் என்னும் ருத்திரர் சிவலிங்கத்தை வைத்துப் பூசனை செய்து அனந்தேசுவரம் ஆகும். திருவாரூரில் பூமண்டலத்தில் வீற்றிருக்கும் பூமீசனான வன்மீகனுடன் ஆகாசத்தின் உச்சியில் இருக்கும் அனந்தேசலிங்கம் வழிபடப்படுகிறது.அதைப் போல் உலகின் அடியில் உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆடகேசர் என்னும் சிவலிங்கத்தை நினைவு கூரும் வகையில் இங்கு ஆடகேசர் சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. உலகின் அடிக் கோயில் ஹாடகேசம் என்னும் புவனம் உள்ளது. அங்கு ஹாடகேசர் என்னும் ருத்திரர் மகாலிங்கத்தை வைத்துப் பூசித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வகையில் திருவாரூர் மும்மண்டலமாகிய பூமி, ஆகாசம், பாதாளம் ஆகியவற்றைக் குறிக்கும் தலமாகவும் மும்மண்டல மூர்த்தியாகிய மூன்று லிங்கங்களை கொண்ட தலமாகவும் உள்ளது.சிவபெருமானிடம் முப்பெரும் சக்தி உள்ளது. அவற்றை லிங்க வடிவில் வழிபடுகின்றனர். அவை. யோக, போக, வீரம் என்பதாகும். அவை யோகலிங்கம், போக லிங்கம், வீரலிங்கம் எனப்படுகின்றன. இவற்றை யோகேஸ்வரர், போகேஸ்வரர், வீரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன. காசியில் இந்த முப்பெயராலும் லிங்கங்கள் உள்ளன. திரையம்பகர் என்னும் தலம் ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆவுடையாருக்கு நடுவே அமைந்த சிறு குழிக்குள் மூன்று லிங்கங்கள் உள்ளது. தென்னகமெங்கும் மூன்று லிங்க வழிபாடு சிறப்புடன் உள்ளது.

பரிமளா

The post மூன்று லிங்க வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: