சூரிய வழிபாட்டினால் என்ன நன்மை?

ஆயிரக்கணக்கான நன்மை சூரிய வழிபாட்டினால் உண்டு. அதனால் தான் தினசரி பூஜையின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரத்தைச் சொன்னார்கள். யோக சாஸ்திரத்திலும் சூரிய நமஸ்காரம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆன்றோர்கள் வழிபாட்டு முறைகளை யோக சாஸ்திரத்தோடும் உடல்நலம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்களோடும் இணைத்துத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்பதை யோசிக்கும் பொழுது வியப்பாக இருக்கும்.
உங்களுக்கு வைட்டமின் டி (VITAMIN D12) குறைபாடு இருக்கிறது. அதற்கான மாத்திரைகள் வந்தாலும் மருத்துவர், ‘‘காலையில் ஒரு அரை மணி நேரம் வெயிலில் உங்கள் உடலின் பாகங்கள் படும்படியாக நில்லுங்கள்’’ என்று அறிவுறுத்துகிறார் அல்லவா. மேல் நாட்டினர் இதை சூரியக் குளியல் என்று கடற்கரை ஓரத்தில் சாய்வு நாற்காலி போட்டு படுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் நம்முடைய ஆன்மிகம் தினசரி 15 நிமிடம் கிழக்கே சூரியனைப் பார்த்து, சூரியக் கதிர்கள் உன்மீது படும்படியாக நின்று கொள். குனிந்து வணங்கு என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். சன் பாத் (SUN BATH) விரும்பும் நாம் சூரிய நமஸ்காரத்தை ஆன்மிகம் என்று தள்ளுபடி செய்கிறோம். அதுதான் விஷயம்.

வீட்டில் எங்கெங்கே விளக்கேற்றுவது?

குறைந்தபட்சம் பூஜை அறையில் காலையில் மாலையிலும் விளக்கேற்றுங்கள். வாய்ப்பு இருந்தால் வாசலில் கிழக்குநோக்கி ஒரு விளக்கு ஏற்றுங்கள். அதைப்போல நடுக் கூடத்தில் ஒரு விளக்கு ஏற்றுங்கள். சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றுங்கள்.

எதனால் பகவானிடம் இருந்து விலகுகிறோம்?

மாயையால் பகவானிடம் இருந்து விலகுகின்றோம். மாயை பந்தங்களை ஏற்படுத்துகிறது. அந்த பந்தங்கள் பகவானை விட்டு நம்மை விலக வைக்கிறது. இந்த மாயையை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. ‘‘மம மாமா துரத்தயா” என்று பகவான் கீதையில் சொல்கின்றார். என்னுடைய மாயையை ஞானிகளால் கூட கடக்க முடியாது என்கிறார். அப்படியானால் எளிய மனிதர்களான நாம் எப்படிக் கடப்பது என்று கேள்வி எழலாம். சரணடைவதன் மூலமாக அவனே அந்த மாயையை கடக்க வைப்பான். அதற்குத்தான் பக்தி, வழிபாடு, பூஜை எல்லாம்.

வேதாந்தம் என்று எதற்கு பெயர்?

உபநிடதங்களுக்கு வேதாந்தம் என்ற பெயர். அது ஞானத்தை போதிக்கவே ஏற்பட்டது. ஆத்ம ஞானத்தை போதிப்பதற்காக வேத உபநிடதங்கள் ஏற்பட்டன. ஒரு வேத பாகத்தை நான்காகப் பிரித்தால் நான்காவது உபநிடதம். உபநிடதத்தை ஞானகாண்டம் என்று சொல்லுவார்கள். உத்தர மீமாம்சை என்றும் சொல்வார்கள். இந்த வேதாந்தம் எப்பொழுது புரியும் என்று கேட்கலாம். மனம் தூய்மையானால் வேதாந்தம் பிடிபடும். இல்லையென்றால் குழப்பி விடும். அதனால்தான் நம்மாழ்வார் மயர்வற மதிநலம் அருளினன் என்று இறைவனைக் கொண்டாடுகின்றார். சைவத்திலும், ‘‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’’ என்று போற்றுகின்றார்கள். ஞானத்தை
தரவல்லவன் அவன்தானே!

பூஜைஅறையில் எல்லா தெய்வங்களின் படங்களையும் வைக்க வேண்டுமா?

அது பூஜை அறையின் அளவையும் உங்கள் வசதியையும் பொருத்தது. எத்தனை படங்கள் வைத்தாலும் கூட உங்களுக்கென்று பிரத்தியேகமான ஆராதனைப் படத்தை அல்லது சின்ன விக்கிரகத்தை அல்லது சாளக்கிராமத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கே உரிய திரு ஆராதனப் பெருமாள். ராமானுஜர் திருவரங்கநாதனை தினசரி தரிசித்தாலும் அவருடைய தனிப்பட்ட ஆராதனைப் பெருமாளாக பேரருளாளன் (கஞ்சி வரதன்) இருந்தார் என்பார்கள். அதைப்போலவே திருமங்கை ஆழ்வார் பற்பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும் அவருடைய ஆராதனப் பெருமாள் சிந்தனைக்கினியான். இன்றைக்கும் சீர்காழிக்குப் பக்கத்திலே உள்ள திருநகரியில் திருமங்கை யாழ்வார் சந்நதியில் அவர் தனிப்பட்டு ஆராதனை செய்த சிந்தனைக் கினியானை நாமும் தரிசிக்கலாம்.

சுமங்கலி பிரார்த்தனையை அடிக்கடி செய்யலாமா?

சுமங்கலிகளை எப்பொழுது பார்த்தாலும் வணங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது ஆனால் வீட்டில் அதை ஒரு பிரார்த்தனையாக அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தால் வருடத்திற்கு ஒரு தரம் செய்யலாம். அப்படிச் செய்யும் போது நல்ல நாளாகப் பார்த்து செய்வது அவசியம்.சாஸ்திரம் சில விஷயங்களை பிறரிடம் கூறக்கூடாது என்று சொல்கிறதே,

என்னென்ன விஷயங்கள் கூறக் கூடாது?

தனக்குரிய சொத்து, கடன், வயது, உபதேசமான மந்திரம், அவமானங்கள், குடும்ப ரகசியம், செய்த தானம் ஆகிய விஷயங்களை தேவையின்றி பிறரிடம் சொல்லக்கூடாது. இவைகளைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சில பேர் எல்லா விஷயத்தையும் பின் விளைவுகள் அறியாமல் எல்லோரிடமும் சொல்வது உண்டு. குறிப்பாக உங்கள் வருமானத்தை பற்றிச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடி எத்தனை பேர் கடன் கேட்க வருவார்கள் தெரியுமா?

துக்கம் விசாரிக்க செல்வதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா?

இருக்கின்றது. ஆனால், சில குடும்பங்களில் இவை வித்தியாசமாக இருக்கும். அதை அந்தந்த பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும். இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. ஒரு வீட்டில் துக்கம் கேட்கப்போகும் பொழுது நாம் கோயிலுக்கு போய் விட்டோ, வேறு சுபகாரியங்களுக்குப் போய் விட்டோ போவது நல்லதல்ல. அதைப் போலவே போகும் வழியில் தானே என்று துக்கம் விசாரித்து விட்டு சுப காரியங்களுக்குச் செல்வதும் சரியான முறை அல்ல. ஒரு வீட்டில் துக்கம் விசாரிக்க போகும் பொழுது நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக்கூடாது. அதைப்போலவே இறந்து போனவர் வீட்டில் பிரேதம் இருக்கும் பொழுது செல்பவர்கள் கர்மா துவங்குவதற்கு முன்னாலேயே கிளம்பி விட வேண்டும். கர்மா துவங்கிவிட்டால் ரதம் புறப்பட்ட பிறகுதான் கிளம்ப வேண்டும். பத்து நாட்களுக்குள் ஒன்பதாவது நாள் தவிர எந்த நாளிலும் நாள் பார்க்காமல் துக்கம் விசாரிக்கலாம் என்கின்ற அபிப்ராயம் உண்டு. ஆயினும் சிலர் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை போன்ற கிழமைகளை தவிர்த்து விடுவார்கள்.

அருள்ஜோதி

 

The post சூரிய வழிபாட்டினால் என்ன நன்மை? appeared first on Dinakaran.

Related Stories: