மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்!!

ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் பிரதிஷ்டை செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள். இவ்வாலயத்திற்கு ‘மத்தியகைலாஷ்’ என்று பெயரிட்டு முதன் முதலாக அழைத்தவர் காஞ்சி ஸ்ரீமகாசுவாமிகளே! மகாகவி சுப்பிரமணிய பாரதியார், புரட்சிக் கவிஞர் மட்டுமல்ல; அவர், பன்னிரு ஆழ்வார்களைப் போல ஏராளமான பக்திக் பாடல்கள் இயற்றி மிகச் சிறந்த ஆன்மிகத் தொண்டும் செய்திருக்கிறார்.

அன்னை பராசக்தி பற்றியும், கண்ணபிரானைப் பற்றியும், அவர் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்கோடு பாடி இருக்கும் பல பாடல்கள் அவரை ‘பாரதி ஆழ்வார்’ என்று சொல்லத் தகுதி ஆக்கி இருக்கின்றன. அதை எல்லாம் மனதில்கொண்டு அடையாறு ‘மத்திய கைலாஷ்’ ஆலயத்தில் அவருக்கு ‘பாரதி ஆழ்வார்’ என்னும் பொருத்தமான பெயர் சூட்டி பதின்மூன்றாவது ஆழ்வாராக விக்ரகப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட எண்ணம் யாருக்கு எப்படி வந்தது தெரியுமா?

ஒரு சமயம் இத்திருக்கோயிலுக்கு பிரபலமான கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து தலைமை தாங்கி இருந்தபோது, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் அருமை பெருமைகளைப் பற்றியும், ஆன்மிக ஈடுபாடு குறித்தும் மிகவும் பெருமையாகப் பேசினார். பாரதியார் பல ஆன்மிகப் பாடல்களை உள்ளம் உருகிப் பாடி இருக்கிறார். பக்தி நெறியில் வாழ்ந்த மற்ற பன்னிரு ஆழ்வார்களுக்குச் சமமாகப் பல பக்திப் பாடல்கள் இயற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட மகாகவியின் சிலையை எங்கெங்கேயோ தெருக்களிலும் சந்து பொருந்துகளிலும் வைத்து வெயிலிலும் மழையிலும் வாடச் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்களுக்கு ஒப்பான அந்த ஆன்மிகக் கவிஞரை கௌரவப்படுத்த, இந்த மத்திய கைலாஷ் ஆலயத்தில் இடம் கொடுத்தால், அவருக்கென்று ஒரு சந்நதி அமைத்தால் என்ன?

‘பாரதி ஆழ்வார்’ என்ற பொருத்தமான பெயர் சூட்டி, இந்த ஆலயத்தில் அவரது விக்ரகம் வைக்கலாமே!’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு பேசினார். அவரது கருத்தும் அதில் இருந்த நியாயமும் சரி என்று தோன்றவே, உடனே அதற்குரிய முயற்சிகளில் ஆலய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டார்கள்.‘பாரதி ஆழ்வாரின் விக்ரகம் எப்படி உருவாக வேண்டும் என்பதற்கு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே வரை படம் எழுதி உதவினார்.

அதைக் கண்டு நாச்சியார் கோயிலில் உள்ள ஒரு ஸ்தபதி வெண்கலத்தில் பாரதியின் சிலை அமைத்து அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களும், மற்றுமுள்ள ஆலய நிர்வாகிகளும் ‘பாரதி ஆழ்வாரின் சிலை மிக சிறப்பாக வடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தார்கள். அந்த உற்சாகப் பணி நிறைவேறி, பாரதி ஆழ்வாரின் விக்ரகம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

15.8.1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரதம் சுதந்திரப் பொன்விழாவை சீரும் சிறப்புமாகக் கொண்டாடியது. அந்த நாளில், பாரதநாட்டின் சுதந்திரப் பொன்விழா ஆண்டு நினைவாக சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன்மிக வாதியுமான பாரதி ஆழ்வாரின் அழகிய விக்ரகம் அடையாறு மத்தியகைலாஷ் கோயிலில் கோலாகலத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று காலை மிகச் சிறந்த முறையில் விக்ரகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வைபங்கள் நடந்தேறின. மாலையில் நடந்த கூட்டத்தில், ஆன்மிகச் சீலர்கள் பலர்கூடி மகாகவி பாரதியார் ஆன்மிகத்திற்குச் செய்து இருக்கும் அருள் பெரும் தொண்டுகள் பற்றிப் புகழ்ந்து பேசி, போற்றினார்கள்.

இந்த பாரதி ஆழ்வாரின் விக்ரகம் ஆலயத்தில் அன்னை அபிராமியின் விக்ரகத்திற்கு அருகில் உள்ளது. அபிராமியைக் காண வரும் பக்தர்கள் பாரதி ஆழ்வாரையும் வழிபடுகிறார்கள். ஒரு மாபெரும் கவிஞருக்குச் செய்து இருக்கும் மாறுதலான ஆன்மிகச் சேவையைக் கண்டு, இங்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் பெருமையோடு பாராட்டுகிறார்கள். பாரதி ஆழ்வாருக்குத் தினசரி பாலாபிஷேகம் செய்கிறார்கள். எது வேண்டுமானாலும் நிவேதனம் செய்கிறார்கள்.

வருடந்தோறும் வரும் மூல நட்சத்திரம் கூடிய தினத்தில் அவரது பிறந்த நாளில் வழிபாடுகளும், விசேஷ நிகழ்ச்சிகளும் நடத்துவதோடு, ஆலயத்தைச் சுற்றி உலா வரவும் ஏற்பாடு செய்கிறார்கள். அன்று பாரதி பற்றிய கருத்தரங்கம், இசை விழா ஆகியவை சிறப்பாக இடம் பெறுகின்றன.மத்திய கைலாஷ் ஆலயத்திலுள்ள தெய்வங்களை யார் வேண்டுமானாலும் தொட்டு அர்ச்சனை செய்யலாம், தீபாராதனை காட்டலாம். அப்படியொரு ஆன்மிகப் புரட்சியை இந்த ஆலயத்தில் செய்து இருக்கிறார்கள். அன்னை அபிராமிக்கு அருகில் கம்பீரமாக வீற்றிருக்கும் பாரதி ஆழ்வார்,

‘‘எம்முயி ராசைகளும் – எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற்றிட அருள்வாய் – நின்றன்
சேவடி அடைக்கலம் புகுந்து விட்டோம்
மும்மையின் உடைமைகளும் – திரு
முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்
அம்மைநற் சிவசக்தி – எடை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்’’

என்று சிவ சக்தியைப் போற்றித் துதித்துப் பாடியதெல்லாம் இன்று நனவாகி இருப்பதைக் கண்டு பேருவுகை கொண்டு புன்னகை புரிந்த வண்ணம் இருக்கிறார்!

முத்து.இரத்தினவேல்

The post மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்!! appeared first on Dinakaran.

Related Stories: