இப்போது சத்தியத்தை காப்பதற்கு யாரும் இல்லை?

தசரதர் அதிர்ச்சியாகி நின்றார். கவலையும் கண்ணீரும் நிறைந்த அவர் மனம் என்ன செய்வது என்று தெரியாது கலங்கியது. நேற்று வரை ஆசையாக இருந்த மனைவி, திடீரென்று மிகக் கொடுமையானவளாக மாறுகின்றாள். அவளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன. அன்பைத் தவிர வேறறியாதவள் கொடூரமாக நடந்து கொள்ளுகிறாள். கணவனைக் குறித்து பெருமையாக நினைத்தவள், கணவன் முகம் மாறினால் கூட தான் ஏதோ தவறு செய்துவிட்டது போல் துடிப்பவள், கணவன் எத்தனை துன்பப்பட்டாலும் கண்டுகொள்ளாதவளாக, தன்னுடைய வார்த்தைகளிலும் செயல்களிலும் சற்றும் விட்டுக் கொடுக்காதவளாக, பிடிவாதக்காரியாக இருக்கிறாள் என்று சொன்னால், கணவனுக்கு சந்தேகம் வந்துவிடும்! இவள் தானாகவே இப்படி செய்கின்றாளா? இல்லை, வேறு யாராவது பின்னால் இருந்து இவளைத் தவறாக வழி நடத்துகிறார்களா? காரணம், கைகேயனுடைய இயல்பு இது அல்லவே!இந்தச் சந்தேகம் வந்தவுடன் கைகேயியை ஒரு கேள்வி கேட்கின்றான். “கைகேயி?என்ன ஆயிற்று உனக்கு? வஞ்சகர்கள் யாராவது வஞ்சனையை போதித்தார்களோ? என் மேல் ஆணை உனது நிலையின் உண்மையான காரணத்தைச் சொல்? என்று கேட்கிறான். இப்படி ஆதரவாக கேட்பது கைகேயி மனதை மாற்றும் என்று தசரதன் நினைக்கிறான். ஆனால் கைகேயி சொன்ன பதில், அடடா கம்பன் அதைப் பதிவு செய்கிறான், பாருங்கள்.

திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இவ்வரங்கள்
குசைப் பரியோய் தரின் இன்று கொள்வென் அன்றேல்
வசைத்திறன் நின்வயின் வைத்து மாள்வேன் என்றாள்

பிடிவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். பிடிவாதம் பேச்சில் எத்தனைத் தெளிவைத் தருகிறது, பாருங்கள்.‘‘மன்னா, இந்த பேச்சு எல்லாம் எதற்கு? என் மனதை யாரும் கெடுக்கவில்லை. நீ எனக்கு இரண்டு வரங்கள் தருவேன் என்று சொன்னது உண்மைதானே !அந்த வரங்களை இப்போது நான் கேட்கிறேன், நீ தந்தால் ஏற்றுக்கொள்வேன். தராவிட்டால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. சொன்ன சொல் தவறிவிட்டான் தசரதன் என்கின்ற பழியை உனக்கு கொடுத்துவிட்டு நான் செத்துப் போவேன், அவ்வளவுதான்”. கொஞ்ச நஞ்ச உயிரும் தசரதனுக்குப் போய்விட்டது. ஏற்கனவே தீயினால் சுட்ட புண் ஆறாமல் இருக்கும் பொழுது, அதிலே கூர்மையான வேலைச் செருகினால் எத்தனை வலி இருக்குமோ அத்தனை வலியால் துடித்தான். வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது என்று சொல்வார்கள். கம்பன் இதிலே இன்னும் ஒரு சொல்லை சேர்த்துக் கொள்கின்றான். வெந்த கொடும் புண்ணில் வேல் நுழைந்தது என்கிறான்.தசரதன் ஒரு பைத்தியக்காரனாகவே மாறிவிடுகின்றான். ஆம் அவனுடைய மனநிலை தடுமாறி விடுகிறது. என்ன நினைக்கிறான் தெரியுமா? கைகேயியைக் கொன்றுவிட்டால் என்ன என்று நினைக்கிறான். அதுவும் கொஞ்ச நேரம்தான். இப்பொழுது தசரதன் இன்னொரு நிலைக்குப் போகின்றான். கைகேயியை கொன்று விடலாம் என்று நினைத்த நிலைக்கு நேர் எதிர் நிலை அந்த நிலை. இவளைத் தண்டித்து விடலாம். ஆனால் அப்பொழுதும் தீமை தான் வரும். அதே நேரத்தில் இவள் கேட்ட வரங்களைத் தர மறுத்தாலும் தீமை தான். எனவே இவளைச் சற்று சாந்தப்படுத்தி யாசித்தாவது இந்த நிலைமையை மாற்ற முடியுமா என்று யோசிக்கிறான்.ஒரு கணவன் செய்யக்கூடாத காரியத்தைச் செய்கின்றான். ஆம் தன்னுடைய காதல் மனைவியின் காலில் விழுந்து யாசிக்கின்றான்.

கோல் மேல்கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்
போல் மேல் உற்றது உண்டு எனில் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல்வீழ்ந்தான் கந்து கொல் யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான்

மிகச்சிறந்த யானையை உடைய வீரக்கழல் அணிந்த மன்னர்கள் தசரதனின் காலில் விழுவதற்காக நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போடுவார்கள். அப்படிப்பட்ட பெருமை உடைய மன்னன் தசரதன் கைகேயியின் காலில் விழுந்தான். இப்பொழுது ஆத்திரத்தை விட பொறுமை நல்லது என்று நினைக் கிறான். இந்தப் பொறுமையை கடைப்பிடிப்பதால் ஏதேனும் நன்மை நடக்கும் என்று சொன்னால், எதைச் செய்தாவது பொறுமையோடு காரியத்தைச் சாதித்துக் கொள்வது நல்லது அல்லவா?‘‘இதோ பார் கைகேயி, நீ உன்னுடைய மகன் பரதனுக்காக அரசு கேட்கிறாய். நல்லது. இதை பரதன் ஏற்றுக் கொள்வானா என்று நீ யோசித்துப் பார்த்திருக்கிறாயா? அல்லது அப்படியே பரதன் ஏற்றுக்கொண்டாலும் அவனுடைய ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி நீ நினைக்கிறாய்? மக்களால் விரும்பப்படாத ஒரு ஆட்சியை உன்னுடைய மகன் பெற்று நீயும் பழிச்சொல்லில் காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்கிறாயே, இதனால் என்ன பயன்? அரசாட்சியை பரதனிடம் கொடுத்துவிட்டு ராமன் காடாள்வதை மனிதர்களோ தேவர்களோ, ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறகு எப்படி இந்த நாட்டை உன்னால் ஆட்சி செய்யமுடியும்?”‘‘நான் சொன்னேன் என்பதற்காகத் தான் ராமன் ஆட்சியை ஏற்றுக் கொண்டானே தவிர அவனுக்கு அரசாட்சியைச் செய்வதில் விருப்பமில்லை. நீ கேட்டாலும் உனக்குத் தந்து விடுவான்.

கைகேயி, கொஞ்சம் சிந்தித்துப்பார். உனக்கு என்ன வேண்டும்? என்னுடைய கண்கள் வேண்டு மென்றாலும் நான் கொடுத்து விடுகிறேன். என் உயிரை வேண்டுகிறாயா? மகிழ்ச்சியோடு தருகிறேன்”‘‘சரி உன்னுடைய வரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றாயா? பரவாயில்லை கைகேயி, நான் ஒரு வரத்தை தந்துவிடுகின்றேன். நாட்டைப் பெற்றுக்கொள். ஆனால் ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே”‘‘நான் சத்தியம் தவறாதவன். உனக்கு வரங்களைத் தருகிறேன் என்று வாக்குறுதி தந்துவிட்டேன். இனிமேல் அந்த வாக்குறுதியை மீற மாட்டேன். நான் உன்னிடம் இப்போது யாசிக்கிறேன். நீ ஒரே ஒரு வரத்தை மட்டும் மறந்துவிடு”இப்பொழுது கைகேயி ஒரு வார்த்தை பேசுகிறாள். கம்பனைப் படிப்பவர்கள் தசரதனுடைய குணத்தை சொல்வதற்காக இந்த வார்த்தையைத்தான் மேற்கோள் காட்டுவார்கள். தசரதனை விட மிக அழகாக பேசத் தெரிந்தவளாக இருக்கின்றாள் கைகேயி என்பதை இந்த இடத்தில் கவனிக்கலாம். அவள் எந்தபதற்றமும் இல்லாமல் தசரதனின் பதற்றத்தைப்பற்றி கவலைப்படாமல் மிகப் அழகாகப் பொறுமையாக, நயமாகப் பேசுகிறாள். ‘‘மன்னா, நீ எனக்கு இரண்டு வரங்களைத் தருவதாகச் சொன்னாய். இப்பொழுது கேட்டால் தருவதற்கு மறுத்து கோபப்படுகிறாய். சரி விடு .சத்தியம் தவறாத ஒரு மன்னன் இந்த உலகத்திலே இருந்தான். அவன் தசரதன் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். இப்போது சத்தியத்தை காப்பதற்கு யாரும் இல்லை.

இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்
தன்னேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்
முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய் முனிவாயேல்
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள்

பொதுவாகவே மனிதனின் மனம் இளகியது. ஆனால், அந்த இளகிய மனம் கடுமையாகிவிட்டால் பெரும்பாலும் மறுபடியும் அதில் இளக்கமோ இரக்கமோ ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு உளவியல்தான்.

The post இப்போது சத்தியத்தை காப்பதற்கு யாரும் இல்லை? appeared first on Dinakaran.

Related Stories: