திருப்பம் தரும் திருப்புகழ்!

திருமால் மருகன் திருமுருகன்! 5

திருமுருகன் மீது தீராக பக்தியும், ஆராத அன்பும், மாறாத காதலும் கொண்டவர் அருணகிரிநாதர். எனவே திருப்புகழ் என்றாலே வேலவனின் சிறப்புகளை மட்டுமே விவரிக்கும் நூல் என்றே பொதுவாகப்பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவன்று. அவர் ஆறுமுகனைப் புகழும் விதமே அலாதியானது. கந்தனை அவர் கவிதையில் போற்றும் முறையே தனிச்சிறப்பு வாய்ந்தது.

“அறுசமய சாத்திரப் பொருளானே!
சமயம் ஆறிரு தேவத! சமயநாக!’’
என்று கந்தசாமியின் சிறப்பைப்
பாடுகிறார்.

முருகப் பெருமானை கணபதியின்தம்பியே! சிவபிரானுக்கே பிரணவப் பொருளை ஓதியவரே! பராசக்தியின் பாலகரே! திருமாலின் மருகரே! என்றெல்லாம் அழைப்பதில் ஆனந்தம் கண்டவர் அருணகிரியார்! அப்படி அழைக்கையில் அந்தந்த மூர்த்திகளின் சீர்த்தியையும், கீர்த்தியையும், நேர்த்தியையும் பூர்த்தியாகப் பாடியுள்ளார். திருப்புகழில் ராமாயணம், திருப்புகழில் மகாபாரதம், என்றே நூலாகத் தொகுக்கும் வண்ணம் விஷ்ணுவின் பெருமைகளை விரிவாகப் பாடியுள்ளார். தன் வழிபடு தெய்வம் வடிவேலன்தான் என்று வகுத்துக் கொண்டு வணங்கி மகிழ்ந்தபோதிலும், அனைத்து தெய்வப்புகழையும் இணைத்து சமரச நோக்கில் ஷண்மத மூர்த்திகளையும் பாடியதில் தனி ஒருவராக அருணகிரியார் தடம் பதிக்கின்றார், இடம் பிடிக்கின்றார்! ராமாயணத்தின் நிகழ்வுகள் பலவற்றை சுருக்கமாகவும், சுவையாகவும் சொல்கின்ற அருணகிரியார்.

‘‘கருவடைந்து பத்துற்றதிங்கள் வயிறிருந்து’’என்று தொடங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழில் சற்று வித்தியாசமாக அனுமன், சுக்ரீவன், வாலி, ஜாம்பவான், நீலன் ஆகியவர்களின் தோற்றம், அவர்களின் முந்தைய நிலை பற்றியும் விரிவாக எடுத்துரைப்பது வியப்பை அளிக்கிறது. அப்பாட்டின் முற்பகுதியில் மானிட வாழ்வின் சுருக்கத்தையும் பிற்பகுதியில் ஸ்ரீராமருக்குத் துணையாக அமைந்தவர்களையும் குறிப்பிடுகிறார்அருணகிரிநாதர்.

‘‘கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிற்றிருந்து முற்றிய பயின்று
கடையில் வந்து தித்துக் குழந்தை வடிவாகி
கழுவி அங்கெடுத்துச் சுரந்த
முலை அருந்து விக்கக் கிடந்து
கதறி அங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி
அரைவடங்கள் கட்டிச் சதங்கை
இடு குதம்பை, பொற்சுட்டி, தண்டை
அவை அணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி
அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணி உழன்று சுற்றித் திரிந்த
தமையும் உன் கிருபைச் சித்தம் என்று
பெறுவேனோ?’’

தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து சின்னஞ்சிறுகுழந்தையாக வெளியில் விழுந்து, அதன் பின் முலைப்பால் அருந்தி, வளர்ந்து, சிறுகை நீட்டியும், குறுகுறு என தளிர்நடை பழகியும், கைகொட்டியும், காலில் அணிந்த தண்டை சதங்கை சப்திக்கவும் வளர்ந்து இளைஞனாக மாறி பருவ ஆசை மீதூர இளம்வயதில் மங்கையர் மயக்கில் விழுந்து, அதன் காரணமாக உடல் நலிவுற்று வாடும் அடியேன், ஆறுமுகனே! உன் திருவருள் பெறுவது கைகூடுமா?

மனிதப் பிறவி காணும் அனைவருமே பொதுவாக அன்னை தந்தையர் அரவணைப்பில் வளர்ந்து, குழந்தைப் பருவம் மாறி இளமை அடைந்ததும் பெண் இன்பமே பேரின்பம் என மயக்குற்று எவ்வித லட்சியமும் வகுத்துக் கொண்டு சாதனைகள் புரியாமல் அரிய பிறவியான ஆறறிவு பெற்ற உயர்திணையாக உதித்தும் உன்னதம் அடையாமல் உலகிற்கு பாரமாக அமைந்து வறிதே தங்கள் வாழ்க்கையைக் கழித்துவிடுகின்றனர்.தேவாரமும் திருப்புகழ் போலவே இக் கருத்தைப்பதிவு செய்துள்ளது.

“பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும்
மௌவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்து நாளும்
குறிக்கோள் இலாது கெட்டேன்!’’
‘ஆவி சாவி ஆகாமல் நீசற்று அருள்
வாயே’ என்று பிறிதொரு திருப்புகழில்

அருணகிரியார் பேசுகின்றார். ராமாயணம், பாரதம், பாகவதம். கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் என பல புராணச் சம்பவங்களை பொருத்தமான முறையில் அருணகிரியார் தம் திருப்புகழில் பொதிந்து வைத்துள்ள அழகே அழகு! ‘கருவடைந்து பத்துற்ற திங்கள்’ பாட்டின் பிற்பகுதி முழுவதுமே ராமாவதாரத்தில் ராமபிரானுக்குத் துணையாக நின்றவர்
களைப் பற்றி விலாவாரியாக விவரிக்கின்றது.

“இரவி இந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தன்என்றும்
நெடுநீலன்

எரிய தென்றும் ருத்ரர் சிறந்த
அனுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
அரியதன் படைக் கர்த்த ரென்று
அசுரர்தம் கிளைக் கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்
மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குட் சிறந்த பெருமாளே!’’

ராவணன் அழியாவரம் பெற்றவன். அவனை வதம் செய்வதற்காகவே ராம பிரான் தசரதமைந்தனாக அயோத்தியில் அவதரித்தார். போரில் ராமபிரானுக்குத் துணையாக சுக்ரீவள், அனுமன், ஜாம்பவான், நீலன், வானரவீரர் படையினர். அமைந்தனர். ராவணவதம் நிகழ்ந்தது. இதனை நாம் அனைவருமே அறிவோம்! ஆனால், பலருக்கும் தெரியாத முக்கியமான செய்தி ஒன்றை இத்திருப்புகழ் வெளிப்படுத்துகின்றது.

அது என்ன என்று அறிவோமா?
ராவணன் வரம் கேட்ட பொழுது

இரணியனைப் போலவே எதன் மூலமும், எவராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது. என்றே கேட்டான். ஆனால், அப்பொழுது மனிதர்களையும் குரங்குகளையும் பலம் அற்றலை எனக் கருதி அற்பசக்தி படைத்த மனிதன், குரங்கு மூலம் எனக்கு சாவு வர வாய்ப்பில்லை என எண்ணி அவற்றை தன் பட்டியலில் தவிர்த்துவிட்டான். இதன் காரணமாகவே திருமால் தசரதமைந்தனாகமானிட குலத்தில் அவதரித்தார். சுக்ரீவன், அனுமன், முதலான வானரர்கள் போரில் துணைபுரிந்தனர். ராவணன் கதை முடிந்தது. அரிதான இச்செய்தியையே இத்திருப்புகழ் விவரிக்கின்றது.

“இரவி என்றால் சூரியன். சூரிய அம்சமே சுக்ரீவன்.
இந்திர அம்சமேவாலி பிரம்மதேவரே ஜாம்பவான்.
அக்னி அம்சமே நீலன் ருத்ர அம்சமே ஆஞ்சநேயர்.

இவர்கள் அனைவரும் ராமபிரானுக்கு துணையாக அமைந்தனர்.
அரியதன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக் கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின்
மருகோனே!’’

திருமால் மருகன் திருமுருகன் என்று அருணகிரியார் அழைப்பதில்தான்
எத்தனை அர்த்த விசேஷங்கள்,
புராண நுட்பங்கள் என எண்ணி எண்ணி வியக்கலாம்!,

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post திருப்பம் தரும் திருப்புகழ்! appeared first on Dinakaran.

Related Stories: