திருவருட்பாவில் தந்தை மகன் உறவு

உலக மொழிகளிலேயே அதிக அளவிலான உறவுப்பெயர்களைக்கொண்டு மானிடர்களிடத்து உறவாடும் மொழி தமிழ். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பேச விழையும் மொழிக்கும் தனித்த உறவு உண்டு. தான் பிறந்த பிறப்பைக்கொண்டு தாய்மொழி என்று மொழியுடன் உறவாடுகின்றான். தன் பணியின்பொருட்டு அயல்மொழிகளையும் கற்று உலகமொழிகளுடனும் உறவாடுகின்றான். ஏன் தன்னுடைய மொழியிலுள்ள கருத்துகளைப் பிறமொழிக்கும் பிறமொழிகளிலுள்ள கருத்துகளைத் தன் மொழிக்கும் பெயர்த்து, கொண்டும் கொடுத்தும் சம்பந்தியைப்போல் உறவு கொண்டாடுகிறான்.

இவ்வாறு மொழிகள் மனிதனுடன் உறவுகாட்டும் உருவுடையன. இத்தகு மொழிகளில் தோன்றும் இலக்கியங்களுள் மனித உறவு மாண்புகள் மண்டிக்கிடக்கின்றன. அவ்வகையில், தமிழ்மொழியில் உள்ள சமய இலக்கியத்தை ஒரு கோட்டினை இட்டுப் பிரிக்கவேண்டுமென்றால் அது இராமலிங்க அடிகளார் நடுக்கோடாக இட்டு வள்ளலாருக்கு முன், வள்ளலாருக்குப் பின் என வரிசைப்படுத்தலாம்.

சமய இலக்கியங்களைச் சமன்செய்யும் கீர்த்தியுடைய வள்ளற்பெருமானின் இலக்கியங்களான ஆறுதிருமுறைகளில் மனித உறவு எப்படியிருக்கிறது, குறிப்பாகத் தந்தை – மகன் உறவு எப்படி வெளிப்படுகிறது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.தந்தை என்ற சொல்லை, தந்த +ஐ என்று பிரித்தால் ஐ – என்ற சொல் தாயைக் குறிக்கும். தாய்க்குக் கருவைத் தந்த காரணத்தாலேயே தந்தையைத் தந்தை என்று அழைப்பது மரபாயிற்று. தாயின் கருப்பையுள் தங்கும் குழந்தை பத்து மாதம் கருவிருப்பதற்கு முன்பாகவே அக்குழந்தை தந்தையின் வயிற்றில் இரண்டு மாதகாலம் குடியிருக்கிறது. இதனை,

“எருவாய் கருவாய் தனிலே உருவாய்” (திருப்புகழ்)
என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.

தாயின் வயிற்றில் இருந்தால் அதற்குக் ‘கரு’ என்று பெயர். தந்தையின் வயிற்றில் இருந்தால் அதற்கு ‘எரு’ என்று பெயர். இப்படி ஒரு குழந்தையானது பிறப்பில் தாய்க்கு முன்பே தந்தையின் பந்தம் தளைத்துவிடுகிறது.வள்ளற்பெருமான் பிறந்து சில ஆண்டுகளுக்குள் அவரைச் சிதம்பரம் நடராசப்பெருமான் திருக்கோயில் வழிபாட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள். அப்போது வழிபாடு முடிந்தவுடன் திரை விலக்க சிதம்பர இரகசியம் காட்டப்படுகிறது. அப்போது அக்குழந்தை அந்த இரகசியத்தைக் கண்டு இறைவனை முதன்முறையாகத் தந்தை என்ற நிலையில் கண்டு உறவாடியது எனலாம்.இப்படி இராமலிங்க அடிகளுக்கும் இறைவனுக்கும் இடையே உருவாகிய தந்தை மகன் உறவு தளைத்து அவர் அருளிய அருட்பாவின் பலவிடங்களில் காணக்கிடைக்கிறது.

இறைவனை,“தாயாகி தந்தையுமாம் தாங்குகின்ற தெய்வம்” என்றும்
“தடித்த ஓர் மகனை தந்தை ஈண்டு அடித்தால் ……. ……
தந்தை அணைப்பன்.…….” என்றும்

பல இடங்களில் இறைவனைத் தந்தையாகவும் தாயாகவும் நினைந்து பாடினாலும் தந்தை என்று ஏற்றிப் பாடுமிடங்களே அதிகம் ஆகும்.ஒரு தந்தை என்பவன் தன் குழந்தைக்கு நல்ல கல்வியை நல்க வேண்டும். ஒழுக்க நெறிகளை உரைக்க வேண்டும். தீங்கு வழிகளில் செல்லாது தடுத்தல் வேண்டும்.இவையெல்லாம் தந்தையின் கடமைகளாம். இதைத்தான்,

“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்கிறது சங்க இலக்கியம்.
“தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”
என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு மகன் தவறான செயல்களைச் செய்வதைத் தந்தை ஏற்கமாட்டான். இதனை,

“தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில்
சழக்குரையாடி வெங் காமச்
சிந்தையராகித் திரிகின்றார் – அந்தோ
சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட்டு
இவ்வுலகி யலில் அவ்வாறு

தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ
திருவுளம் அறியநான் அறியேன்”
(பிள்ளைப்பெருவிண்ணப்பம்-102)

என்ற பாடலில் கூறுமிடத்து, குழந்தை தவறான சொற்களைப் பேசி, காமச் சிந்தையராக நடந்துகொள்வதைத் தந்தையர் வெறுப்பர். அவர்களைப்போல நான் ஒருநாளாவது தவறு செய்திருப்பேனா? தந்தையே எனக்கு இரங்கி அருள்செய்க என்று தன்னிடம் குற்றமில்லை என்று கதறி இறை வனிடம் தந்தை – மகன் உறவு பாராட்டுகிறார் வள்ளற்பெருமான். மேலும்,ஒரு தந்தையென்பவன் மகனின் எவ்வெச் செயல்களை வெறுப்பான் என்பதை பிள்ளைப் பெருவிண்ணப்பத்தில்,

“………… ஒழுக்கத்தை மறந்தே
கள் அருந்துதல் சூதாடுதல் காமக்
கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார்………”
(மேலது – 103) என்றும்
“சொன்னசொல் மறுத்தே மக்கள்தாம் மனம்போம்
சூழலே போகின்றார்”
(மேலது – 103) என்றும்
பட்டியலிடுகின்றார்.

இதுமட்டுமா? இறைவன் தனக்கு இரங்கி அருளியவற்றைப் பற்றிப் பல இடங்களில் சொல்லிய அடிகளார் இதுவரை தந்ததும் இனிமேல் தரப்போவதும் நீதான் என்று இறைவனைக் கீழ்க்காணும் அடிகளில்,

“தந்தாய் இன்றும் தருகின்றாய்
தருவாய் மேலும்”
(வாதனைக் கழிவு – 20)
உலகில் சில கொடியோர் பிறவுயிர்களைக் கொல்லத் தொடங்கிய போதும் உயிர்கள் துன்புறும்போதும் மீனினைக் கொல்லக்கூடிய வலை, தூண்டில் போன்றவற்றையெல்லாம் எண்ணி உளம் நடுங்கினார் வள்ளலார். அப்படி தான் நடுங்கியதைத் தந்தையே நீதான் அறிவாய் என்று இறைவனிடம் தெரிவிக்கிறார்.

“துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பயந்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின்திருவுளம் அறியும்”
(பிள்ளைப் பெரு விண்ணப்பம் – 64)

இதில் ஒருமகன் தன் மனக்கலக்கத்தைத் தந்தையிடம் கூறும் உறவுத்திறம் ஒளிர்கிறது. மேலும், இறைவனிடம் சில வேண்டுதல்களை அடிகளார் முன் வைக்கின்றார்.

“அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே”
(சுத்த சன்மார்க்க வேண்டு
கோள் – 1)

இப்பாடலில் தான் வேண்டுவது அனைத்தையும் அருளவேண்டும் என்றும், எல்லாவுயிர்களுக்கும் தான் அன்புசெயல் வேண்டும் என்றும் எல்லா இடங்களிலும் நின்புகழைப் பேச வேண்டுமென்றும் சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதியின் அருள் வேண்டுமென்றும் தான் தவறுகள் இழைப்பின் அதைப் பொறுத்தல் வேண்டுமென்றும் இறைவனைப் பிரியாத நிலைமையும் வேண்டுமென்றும் பல வேண்டுதல்களைக் கூறுமிடத்து தன் தந்தையிடம் மகன் கேட்பதாக, ‘அப்பா’ என்று தொடங்கி வேண்டுகிறார். இங்கும் தந்தை – மகன் உறவு வெளிப்படுகிறது.

மேலும், தான் தீது புரிந்தேன் என்றாலும் அதை ஏற்பதுதான் ஒரு தந்தைக்கு அழகு. ஒரு தந்தையென்பன் மகனின் குற்றங்களைப் பொறுக்க வேண்டும். இல்லாவிடில் நான் யாரிடம் சென்று குறையைச் சொல்லமுடியும் என்று தன் தந்தையாகிய இறைவனிடம் உரிமையாக வேண்டுகிறார். இதனை,

“போதுதான் விரைந்து போகின்றதருள் நீ புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கெடுத்து என்குறை இசைப்பேன்
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத் திருவுளத்து அடைத்திடுவாயேல்
ஈதுதான் தந்தை மரபினுக்கு அழகோ
என்னுயிர்த் தந்தைநீ அலையோ”
(திருவடி முறையீடு – 2)

என்ற பாடல்மூலம் எடுத்தியம்புகிறார். இதே கருத்தை,

“தந்தை நீ அலையோ தனயன்நான் அலனோ
– தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலமிடுகின்றேன்”
(மேலது – 3)என்ற பாடலும் பேசா நிற்கிறது.

இவ்வாறு தன்னை மகனாகவும் இறைவனைத் தந்தையாகவும் வைத்து அன்பு பாராட்டி அருள்பெறும் வழிக்கு “சற்புத்திர மார்க்கம்” என்று பெயர். இவ்வாறான நெறியை முதலில் கடைப்பிடித்தவர் திருஞானசம்பந்தராவார்.

இவரைக் குருவாகக் கொண்ட காரணத்தால் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்ற கோட்பாட்டின்படி வள்ளற்பெருமானும் இறைவனைத் தந்தையாக்கித் தன்னை மகனாக்கிப் பாடுகின்றார். இவ்வாறான உறவுநெறி பாராட்டும் ஒண்மையால் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான இடைவெளி குறையும் என்பது திண்ணம்.வள்ளற்பெருமானின் இவ்வழியை நாமும் பின்பற்றி இறைவனின் திருவடிகளைப் பற்றுவோம். இதனைத் தமிழில் ‘மகன்மைநெறி’ என்பர்.

சிவ.சதீஸ்குமார்

The post திருவருட்பாவில் தந்தை மகன் உறவு appeared first on Dinakaran.

Related Stories: