இந்த வார விசேஷங்கள்

பீஷ்மாஷ்டமி 17.2.2024 – சனி

பீஷ்ம அஷ்டமி அல்லது ‘பீஷ்மாஷ்டமி’ என்பது மகாபாரதத்தின், `பீஷ்மருக்கு’ அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துபண்டிகை யாகும். `கங்கா புத்ர் பீசம்’ அல்லது `பீஷ்ம பிதாமஹா’ என்றும் அழைக்கப்படும் பீஷ்மர், இந்த நாளில் அவரது ஆன்மாவிலிருந்து பிரிந்தார். இது `உத்தராயண காலத்தில், அதாவது தேவர்களின் பகல் நேரத்தில் நிகழ்ந்தது. தை அமாவசைக்குப் பிறகு வரும் சுக்லபக்ஷத்தின் ‘அஷ்டமி’ அன்று பீஷ்ம அஷ்டமி அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் வரும். பீஷ்ம அஷ்டமியை உள்ளூரில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.

வங்காள மாநிலத்தில் பகலில் சிறப்புப் பூஜை மற்றும் சடங்குகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள இஸ்கான் கோயில்களிலும், விஷ்ணுகோயில்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். நீராடும்போதும், ஆண்களாக இருந்தால் தலையில் ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி வைத்து, அதன்மீது எள், திருநீறு வைத்து நீராட வேண்டும். பெண்களாக இருந்தால் தலையில் ஏழு எருக்கம் இலைகளின் மீது எள், மஞ்சள் வைத்து நீராட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. சில இடங்களில் இது, 16.02.2024 வடமாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது.திருச்செந்தூர் முருகன் தங்கமுத்து கெடா,

அம்பாள் வெள்ளி அன்ன வாஹனம் 17.2.2024 – சனி

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத்திருச்செந்தூர் அமைந்துள்ளது. ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புறச்சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது.

இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபசராதனை நடக்கும். சண்முகர் சந்நதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது.இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். வருடம் முழுதும் பல விழாக்கள் நடக்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோவிலில் தற்சமயம் மாசி திருவிழா பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 25,2024 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. அதில் இன்று (17 பிப்ரவரி 2024 – சனி) 4ம் நாள் திருவிழா. காலை 7 மணிக்கு – தங்கமுத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம் நடைபெறும். இரவு 6.30 – வெள்ளியானை, அம்பாள் வெள்ளி சரப வாகனத்தில் வலம் வருவார்கள்.

சூரியனின் கோயில் மகா அபிஷேகம்18.2.2024 – ஞாயிறு

உலகத்திலேயே சூரிய பகவான் தனியாகக் காட்சியளிப்பது சூரியனார் கோயிலில் மட்டும்தான். இக்கோயில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரியப்பரிகாரத்தலமான ‘‘சூரியனார் கோயில்’’. மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒரே பிரகாரமும், நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்பகிரகத்தில் மூலவராக ‘‘சூரிய தேவன்’’ இடப்புறம் உஷா தேவியுடனும், வலப்புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். 12 ஞாயிற்றுக் கிழமைகள் இத்தலத்திலேயே தங்கி வழிபடுவது மிகச் சிறப்பு. பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாண்டன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சித்திறம் போன்றவற்றை அளிப்பவன். இன்று அவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

திருக்கண்ணபுரம் கருடசேவை 19.2.2024 – திங்கள்

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரி ராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவத்தலங்களில் திவ்யதேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. காளமேகப்புலவர் ஒரு நயமான பாடலை பாடியிருக்கிறார்.

‘‘கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது’’

இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார். இந்தக் கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால், அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. மாசிமக விழாவில் இன்று கருடசேவை.

ஏகாதசி 20.2.2024 – செவ்வாய்

மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆம்லகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும்.
ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் மன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.

``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர்வினவிலும் வாய் திறவாதே
அந்தகாலம் அடைவதன்முன்னம்
மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து
மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி
ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே’’.

குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம் 21.2.2024 – புதன்

ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரளநாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் ராமாயணத்தில் ராமர் குணங்களில் கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப்பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். ராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.

இருவருமே அரசகுடும்பத்தில் அவதரித்தவர்கள். தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக ராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப்பேறு இன்றி செல்லப் பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார். வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார். பெருமாளான ராமன் வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரியபெருமாள் என்று அழைப்பார்கள். வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப்பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்றும் அழைப்பார்கள்.

நடராஜர் அபிஷேகம் 22.2.2024 – வியாழன்

அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்வது சிறப்பானது என்றாலும், சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம். சிவபெருமான் அக்னி சொரூபமானவர் என்பதால் பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களை அளித்திடுவார் என்பது நம்பிக்கை. நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் எனப்படுகின்றன.

சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப் படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தை கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதை போல் நடராஜ பெருமானுக்கு மாட்டுக் கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும். நடராஜருக்கு நடக்கும் அபிஷேகங்களில் இந்த அபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இன்று நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிசேகம்.

கூடலழகர் மாசி உற்சவம் 23.2.2024 – வெள்ளி

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன. இக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’ மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது. பொதுவாக சைவசமயக கோயில்களில் மட்டுமே நவக்கிரக சந்நதி இருக்கும். வைணவ சமயத்கோயில்களில் நவகிரகங்களுக்குப் பதிலாக, சக்கரத்தாழ்வார் சந்நதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சந்நதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. இவ்வாலயத்தில் மாசி உற்சவத்தில் இன்று கூடலழகர் உலா வருகிறார்.

மேல்மாந்தை பெத்தனாட்சி பூக்குழி 23.2.2024 – வெள்ளி

விளாத்திகுளம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சிஅம்மன் பெரியாண்டவர் திருக்கோயிலில் இன்று பூக்குழி விழா. மேல்மாந்தை ஒருங்கிணைந்த ஆட்டுக்கூட்டத்தை குறிக்கும் சொல் ஆகும். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேலாயுதன் என்ற அரசன் திருநெல்வேலி ஜில்லாவை ஆண்டு வந்தான். சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, வேம்பார், மேல்மாந்தை, சண்முகாபுரம் ஆகியபகுதிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. வேலாயுதன் சிறந்த வீரனாகவும் காமக் கொடூரனாகவும் இருந்தான். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த பெத்தனாட்சி என்ற சிறுமி, அம்மாவின் கட்டளையால் தனது வறுமையின் காரணமாக அரசனின் ஆட்டுக்கொட்டகையில் வேலை செய்தார். சிறுவயதிலிருந்தே பெத்தனாட்சி மிகவும் அழகாக இருப்பாள்.

முப்பெரும் தெய்வங்களில் திருமாலை அதிகம் வணங்குவார். நெற்றியில் நாமம் பூசுவது அவளது வழக்கமாக இருக்கும். இப்படி ஒரு சமயத்தில் பெத்தனாட்சி பூப்படைந்த போது அதை அறிந்த அரசன் வீரர்களை அழைத்து மற்ற பூப்படைந்த பெண்களை இழுத்து வருவது போலப் பெத்தனாட்சி இழுத்து வர ஆணையிட்டான். அதற்கு அந்தப்புரம் வருவதற்கு பெத்தனாட்சி மறுத்து தன்மானம்தான் பெரிதென்று நினைத்து தன் உயிர் நீத்தாள். உயிர்நீத்த மறுநாளே அவள் தெய்வமாக மாறிவிட்டாள். அரசனும் பெத்தனாட்சி சாதாரண பெண்ணல்ல தெய்வ அம்சம்உடையவள் என்று நினைத்து, தான் தவறு செய்துவிட்டோமே என்று மனமுடைந்து அவனும் இறந்தான்.

அதன் பின்னர், கிராமத்தில் நோய்களும் பிணிகளும் மக்களை வாட்டி வதைத்தன. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அதற்கு கருப்பசாமி ஊரின் தென் எல்லையில் உள்ள பெத்தனாட்சி மிகுந்த உக்கிரத்துடன் இருக்கிறாள் அவளைச்சாந்தப்படுத்த கோயில் கட்டி இளவேனிற் காலமான மாசி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா கொண்டாடினால் ஊர்மக்களைக்காத்தருள்வார் என்று வாக்குறுதி கொடுத்தார். அதுபோல, கிராமப்பொதுமக்கள் ஒன்றுகூடி ஊரைக்காத்தருளும் கிராம தேவதைக்கு கோயில் கட்டி அன்று முதல் வருடந்தோறும் மாசிமாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று திருவிழா கொண்டாட ஆரம்பித்தார்கள். பெத்தனாட்சி கிராமதேவதை மட்டுமில்ல மேல்மாந்தைக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். விஷ்ணுபிரியா

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: