ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவன் சாதனை

சென்னை: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இதில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேரவும், மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேரவும் ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.

ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி கல்லூரிகளில் சேரலாம். இந்தியாவில் உள்ள பல பெரிய பல்கலைக்கழகங்களும் இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். முதன்மைத் தேர்வு அமர்வு 1 ஜனவரி 24, 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பதிவு செய்த 12,21,615 பேரில் 11,70,036 பேர் தேர்வெழுதினர்.

இந்தநிலையில் முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் இம்முறை மொத்தம் 23 மாணவர்கள் 100க்கு 100 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷூம் ஒருவர். முதன்மை தேர்வில் பங்கேற்ற 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் jeemain.nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியானது. 2ம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முழு மதிப்பெண்
பெற்ற மாணவர்கள்
மாநில வாரியாக விவரம்
தெலங்கானா 7 பேர்
அரியானா 2 பேர்
ஆந்திரா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா தலா
3 பேர்
டெல்லி 2 பேர்
குஜராத்,
கர்நாடகா,
தமிழ்நாடு தலா
1 நபர்

* முகுந்த் பிரதீஷால் தமிழகத்துக்கு பெருமை
தமிழ்நாடு மாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல், எஸ்சி பிரிவு வாரியான தரவரிசையிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஆராதனா 9.99 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேசிய அளவிலான தரவரிசையில் முன்னிலை பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளார். மேலும், இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேலானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’என்று கூறியுள்ளார்.

The post ஜேஇஇ முதன்மை தேர்வில் நெல்லை மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: