தாக்குதலில் 15 போலீசார் பலியான வழக்கு: 4 நக்சல்களுக்கு ஆயுள் தண்டனை; சட்டீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு

சுக்மா: சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் 15 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் நக்சல் தீவிரவாதிகள் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் தஹாக்வாடா கிராமத்தில், கடந்த 2014ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில காவல்துறை அடங்கிய கூட்டுப் படையினர் மீது ஆயுதம் தாங்கிய நக்சல்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 11 பேர், மாநில காவல் துறையினர் 4 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். இத்தாக்குதல் தொடர்பாக தோங்பால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. பஸ்தர் மாவட்டத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி டி.ஆர்.தேவாங்கன் தீர்ப்பளித்தார். இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின்கீழ் மகாதேவ் நாக், கவாசி ஜோகா, மணி ராம் மண்டியா, தயாராம் பகேல் ஆகிய 4 நக்சல் தீவிரவாதிகள் மீதான குற்றங்களை உறுதி செய்த நீதிபதி, நால்வருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்தார்.

The post தாக்குதலில் 15 போலீசார் பலியான வழக்கு: 4 நக்சல்களுக்கு ஆயுள் தண்டனை; சட்டீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: