எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

சென்னை : எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை பரிசீலிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (பிப்.13) தேமுதிக தலைவரும், நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும். 4 முறை சபாநாயகரை சந்தித்தும் பல முறை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்தும் கடிதங்களை வழங்கி இருக்கிறோம்.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபுப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகே அமைக்க வேண்டும்,”என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பல முறை கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்கு முன்பாக இருந்த சட்டப்பேரவை தலைவர் தனபால் இருக்கை விவகாரத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டாரோ, அதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாங்களும் பலமுறை அவையில் தெரிவித்துள்ளீர்கள். எனினும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,”என்று சபாநாயகர் அப்பாவுக்கு வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார்.

The post எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: