இந்திய மகள்களின் பாதுகாப்பை விட பாலியல் குற்றவாளிகளே பிரதமர் மோடிக்கு முக்கியம்: காங்கிரஸ் விளாசல்

புதுடெல்லி: ‘அதிகாரப் பசியில் இருக்கும் பிரதமர் மோடிக்கு இந்திய மகள்களின் பாதுகாப்பை விட பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பே முக்கியமாக இருக்கிறது’ என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பிரதமர் மோடி நேற்று அரியானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்றதை முன்னிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருந்ததாவது: அரியானா செல்லும் ‘வெளியேறும் பிரதமருக்கான’ இன்றைய கேள்விகள்: கடந்த 2021ல் டெல்லி போராட்டத்தை விவசாயிகள் கைவிட்ட போது அவர்களின் எல்லா கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அவர்களின் முக்கிய கோரிக்கையான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை. வேண்டுமென்றே இதை நிறைவேற்றாமல் காலதாமதமாக்கி, மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை அழைத்து பேசாமல், தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை விரட்டியடித்தீர்கள். இதனால் அரியானா விவசாயிகள் ஏமாற்றும் மோடி அரசு மீது முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எம்பி பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரது மகன் கரண் பூஷண் சிங்கிற்கு கைசர்கஞ்ச் தொகுதியில் சீட் கொடுத்துள்ளீர்கள்.

இது தங்களின் விளையாட்டு வாழ்க்கையை தொலைத்து, நீதிக்காக வெயிலிலும் மழையிலும் தெருவில் போராடும் வீரர், வீராங்கனைகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததற்கு சமம். மோடி குடும்பத்தினரை பொறுத்த வரையில் பெண்கள் சக்தி என்பது வெறும் முழக்கம்தான். மற்றபடி, பாலியல் குற்றங்களில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, பிரிஜ் பூஷண் சிங் போன்றவர்களை அடைக்கலம் தருவதை முக்கியமாக கருதுகிறார்கள். அதிகார பசியில் இருக்கும் மோடிக்கு இந்திய மகள்களை விட பாலியல் குற்றவாளிகள்தான் முக்கியமாகி விட்டனரா? உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் தலித்கள் மீது பல வன்முறை சம்பவங்கள் நடப்பது ஏன்? இதையெல்லாம் பார்க்கும் போது பிரதமர் மோடிக்கு அவமானமாக இல்லையா? இவ்வாறு கூறி உள்ளார்.

The post இந்திய மகள்களின் பாதுகாப்பை விட பாலியல் குற்றவாளிகளே பிரதமர் மோடிக்கு முக்கியம்: காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: