தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்: மம்தா விளக்கம்

தம்லுக்: மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாக மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சின்சுராவில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா, ‘‘பாஜ திருடர்கள் நிறைந்த கட்சி என்பதை முழு நாடும் புரிந்து கொண்டுள்ளது. எனவே அவர்கள் எதிர்பார்க்கும் 400 தொகுதிகள் நிச்சயம் கிடைக்காது. மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்த பிறகு அவர்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்’’ என்றார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில், மம்தாவின் இந்த பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட தம்லுக்கில் நேற்று பேசிய மம்தா, ‘‘நான் நேற்று பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நான் இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கிறேன். அந்த கூட்டணி எனது சிந்தனையில் உருவான கூட்டணி. நாங்கள் தேசிய அளவில் ஒன்றாக இருக்கிறோம். தொடர்ந்து இருப்போம். ஆனால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை. மத்தியில் மட்டுமே கூட்டணி’’ என்றார்.

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்த மம்தா பானர்ஜி, தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்போம் என அப்போதே கூறியிருந்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே பாஜவை வீழ்த்த முடியும் என்பது மம்தாவின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்: மம்தா விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: