ரூ.10,000 ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, நினைவு மண்டபம் : டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

டெல்லி : விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று டெல்லி நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேரணியில் சுமார் 200 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் டெல்லி செல்வதை தடை செய்யும்பொருட்டு ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் சங்கத்தின் முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.விவசாயிகள் டெல்லிக்கு வருவதை தடுக்க மாநில எல்லைகளில் ஆங்காங்கே கான்கிரீட் தடுப்புகள், முள் வேலிகள், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் பின்வருமாறு…

*எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்

*நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

*வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்

*லக்கிம்பூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

*வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடியபோது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்

The post ரூ.10,000 ஓய்வூதியம், கடன் தள்ளுபடி, நினைவு மண்டபம் : டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? appeared first on Dinakaran.

Related Stories: