ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம்: தமிழ்நாடு கர்நாடகா டிரா; இந்திரஜித் விஜய் ஷங்கர் போராட்டம் வீண்

சென்னை: தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கர்நாடகா 366 ரன் குவித்த நிலையில் (தேவ்தத் படிக்கல் 151), தமிழ்நாடு 151 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 215 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா அடுத்தடுத்து விக்கெட்டை பற்றிகொடுத்து 139 ரன்னில் சுருண்டது (56.4 ஓவர்). இதைத் தொடர்ந்து, 355 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு, 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது.

கடைசி நாளான நேற்று விமல் குமார் 16, பிரதோஷ் ரஞ்சன் 10 ரன்னுடன் துரத்தலை தொடர்ந்தனர். விமல் 31 ரன் எடுத்து வெளியேற, பிரதோஷ் ரஞ்சன் – பாபா இந்திரஜித் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தது. பிரதோஷ் 74 ரன் விளாசி வைஷாக் பந்துவீச்சில் படிக்கல் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பூபதி குமார் 19 ரன், முகமது 15 ரன் எடுத்து ஹர்திக் ராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். தமிழ்நாடு அணி 199 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், இந்திரஜித் – விஜய் ஷங்கர் இணைந்து கடுமையாகப் போராடினர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்து தமிழக அணிக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தனர்.

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜித் 98 ரன் எடுத்து (194 பந்து, 3 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானது, தமிழ்நாடு அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்த ஓவரிலேயே விஜய் ஷங்கர் 60 ரன் (107 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுரேஷ் லோகேஷ்வர் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தமிழ்நாடு அணி 105 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது.

கேப்டன் சாய் கிஷோர் 7 ரன், அஜித் ராம் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்னும் 17 ரன் எடுத்திருந்தால் தமிழ்நாடு அணி வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா பந்துவீச்சில் விஜய்குமார் வைஷாக் 3, ஹர்திக் ராஜ் 2, கவெரப்பா, சஷி குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நூலிழையில் தப்பிப் பிழைத்த கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் 3 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு அணிக்கு 1 புள்ளி கிடைத்தது.

சி பிரிவில் அனைத்து அணிகளும் 6 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள நிலையில், கர்நாடகா 24 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு (22), குஜராத் (19), ரயில்வேஸ் (18), திரிபுரா (17), பஞ்சாப் (9), சண்டிகர் (5), கோவா (4) அடுத்த இடங்களில் உள்ளனர். கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் பிப்.16ம் தேதி தொடங்குகின்றன. சி பிரிவில் தமிழ்நாடு தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

The post ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம்: தமிழ்நாடு கர்நாடகா டிரா; இந்திரஜித் விஜய் ஷங்கர் போராட்டம் வீண் appeared first on Dinakaran.

Related Stories: