ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு மண்டலக்குழு தலைவர் வேண்டுகோள்

ஆலந்தூர்: ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆலந்தூர் 12வது மண்டலம், 165வது வார்டுக்கு உட்பட்ட பாரத்நகர் பூங்காவில் ஏரியா சபைக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். ஏரியா சபை உறுப்பினர் பிரபாகரன், சுதா பிரசாத், முன்னாள் கவுன்சிலர் பாபு முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் அலமேலு வரவேற்றார். இந்த கூட்டத்தில் ஏரியா சபை உறுப்பினர்கள் பேசும்போது, ஆதம்பாக்கத்தில் நடந்து வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலமங்கை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள கம்பத்தினை மாற்றவேண்டும், கூடுதல் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

இதற்கு மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் பதிலளித்து பேசும்போது ‘மழை நீர் கால்வாய் பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகள் விரைவில் முடித்து தருவார்கள். ஏரியா சபை உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள், அவர்கள் அளிக்கும் புகார்களை அலட்சியப்படுத்தாமல் அதிகாரிகள் நிறைவேற்றி தரவேண்டும்’ என்றார். இதில் சுகாதார அலுவலர் சுரேந்தர், எலக்ட்ரிகல் பொறியாளர் காயத்ரி, பாரத் நகர் நலசங்க தலைவர் மூர்த்தி, ரமேஷ், தனசேகரன் ரவிக்குமார், ஆதம் பிரகாஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post ஏரியா சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு மண்டலக்குழு தலைவர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: