பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும், விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். மேலும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்காக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றகோரி தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதனை காரணம் காட்டி தனது தரப்பு வாதத்தை முன்வைக்காமல் சிறப்பு டிஜிபி காலம் தாழ்த்தி வந்தார்.

இதையடுத்து நீதிமன்றமே மூத்த வழக்கறிஞரை இந்த வழக்கில் நியமித்து விசாரணை நடைபெறும் என்று நீதிபதி எச்சரித்த நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 5 நாட்கள் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்தனர். தொடர்ந்து அரசு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் 12ம் தேதி (நேற்று) மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேற்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்வதாகவும், கீழமை நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,500 அபராதம், எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தீர்ப்பளித்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

* தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கில் தீர்ப்பு தேதி அறிவித்து விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரியும் ராஜேஷ் தாஸ் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ராஜேஸ்தாஷ் தரப்பில் வாதிட்டப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, ‘விழுப்புரம் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது. விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால்தான் ஆவணங்களை பெற்று ஆய்வுசெய்ய முடியும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு மீது காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: