வரும் 22ம்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் ரவி மதிக்கவில்லை: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பேரவை மாண்பை ஆளுநர் ஆர்.என்.ரவி மதிக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டசபையில் நேற்று காலை ஆளுநர் உரை படித்து முடித்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 13 (இன்று), 14, 15 ஆகிய 3 நாட்கள் விவாதத்துக்காக சட்டப் பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். முதல்நாள் (இன்று) பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தேமுக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.

வரும் 19ம்தேதி திங்கட்கிழமை 2024-25ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்வார்.வரும் 20ம் தேதி வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25க்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து 21 மற்றும் 22ம் தேதிகளில் பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு, பதிலுரை வழங்கப்படும். பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

பேரவையில் ஆளுநர் உரையின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அடுத்து ஆளுநர் உரையை வாசிப்பார். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெறும். இது தான் மரபு. ஆளுநர் பேரவைக்குள் நுழையும்போதே தேசிய கீதம் இசைக்கப்பட்டு தான் அழைத்து வருகிறோம். பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் உரையை படிக்க ஆளுநரை அழைப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு அவரை மதித்து ஆளுநர் உரையை படிக்க அழைத்து வருகிறோம். ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே உரை இறுதி செய்யப்பட்டு அவரிடம் படிக்க வழங்கப்பட்டது.

ஆனால் பேரவை மாண்பை அவர் மதிக்கவில்லை, மீறியிருக்கிறார். அவர் பேசிய சொந்த கருத்துக்கள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கொறடா கோவி.செழியன், பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

* ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே உரை இறுதி செய்யப்பட்டு அவரிடம் படிக்க வழங்கப்பட்டது. ஆனால் பேரவை மாண்பை அவர் மதிக்கவில்லை,
மீறியிருக்கிறார்

The post வரும் 22ம்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் ரவி மதிக்கவில்லை: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: