கத்தாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடற்படை 8 மாஜி அதிகாரிகளும் விடுவிப்பு: ஒன்றிய வெளியுறவு துறை அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கத்தார் உளவுப் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் மாதம் அவர்கள் அனைவருக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள், இந்திய தூதரகத்தை அணுக அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 8 பேரையும் பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கைகளை தொடங்கியது. கடந்த டிசம்பரில் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை முடிவை கத்தார் நீதிமன்றம் மறுஆய்வு செய்தது. அவர்களின் மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்தது. ஒன்றிய அரசின் தொடர் அழுத்தத்தால், 8 பேரையும் விடுவிக்க கத்தார் அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அதனால் கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 முன்னாள் கடற்படை வீரர்களும் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பியுள்ளனர். கத்தார் அரசின் முடிவை வரவேற்கிறோம்’ என்று கூறினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வீரர்கள் அளித்த பேட்டியில், ‘இந்த விஷயத்தில் தலையிட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமரின் தலையீடு இல்லாமல் இன்று இங்கு நிற்க முடியாது. ஒன்றிய அரசின் தொடர் முயற்சியால், நாங்கள் நாடு திரும்பியுள்ளோம்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

The post கத்தாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடற்படை 8 மாஜி அதிகாரிகளும் விடுவிப்பு: ஒன்றிய வெளியுறவு துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: