சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரை நீக்க கோரி மாணவர்கள் நாளை போராட்டம்: எஸ்எப்ஐ அறிவிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரை நீக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்எப்ஐ) நாளை போராட்டம் நடத்துகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் பவித்ரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், கணினி உபகரணங்கள் கொள்முதல், இணையதள தளவாடங்கள் கொள்முதல், இணையதள சேவை கட்டமைப்புகள் உருவாக்குதல், பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ₹2 கோடியில் முறைகேடு, அமேசான் இணைய முறைகேடு, வளாக பராமரிப்பில் முறைகேடு என எழுந்த புகார்களை விசாரிக்க பழனிச்சாமி ஐஏஎஸ் தலைமையில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு, ஒராண்டில் விரிவான விசாரணை நடத்தி, கடந்த 5ம் தேதி அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளது. அதில், துணைவேந்தர் ஜெகநாதன் மீது 6 குற்றச்சாட்டுகளும், பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகளும், தமிழ்த்துறைத்தலைவர் பெரியசாமி மீது 5 குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கணினி அறிவியல் பேராசிரியரும், பதிவாளருமான தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலர் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் துணைவேந்தர், அரசின் ஆணையை செயல்படுத்த மறுத்து வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

ஊழல் முறைகேடுகளின் பிறப்பிடமாக இருக்கும் துணைவேந்தர், கூட்டாளியான பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஒரு அரசு நிறுவனத்தில், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை அமைப்பில், ஒரு தனி நபர் அரசுக்கு சவால் விடுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அரசின் உத்தரவை மதிக்காத துணைவேந்தர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். துணைவேந்தர், பதிவாளர் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திட வேண்டும்.

ஊழல் துணைவேந்தரும், பதிவாளரும் நாளை (13ம் தேதி) நடத்தும் ஆட்சிப்பேரவை கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாளையதினம் ஆட்சிப்பேரவை கூட்டம் நடைபெறும் நாளன்று, காலை 10.30 மணிக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரை நீக்க கோரி மாணவர்கள் நாளை போராட்டம்: எஸ்எப்ஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: