மேட்ரிமோனியல் மூலம் அமெரிக்க மாப்பிள்ளை என அறிமுகம் சுங்கத்துறையினர் பிடித்ததாக ஏமாற்றி பெண் டாக்டரிடம் ₹2.87 கோடி பறிப்பு

*நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை : மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாக அறிமுகமாகி, பரிசு பொருட்களுடன் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்துவிட்டதாக, சென்னை பெண் டாக்டர் ஒருவரிடம் ரூ.2.87 கோடி பணம் பறித்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டாக்டரான இவர், பிரபல தொழிலதிபரின் மகள்.

ராணி வருங்கால கணவரை தேடி மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்து இருந்தார். அவரது புகைப்படத்தை பார்த்து, வாட்ஸ் அப் எண்ணிற்கு அலெக்ஸாண்டர் சான்சீவ் என்பவர், தான் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாகவும், தனியாக மருத்துவமனை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். நல்ல அழகான புகைப்படத்தை ராணிக்கு அனுப்பி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா டாக்டர் என்று ராணி நம்பி, பலமுறை அவரிடம் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளார்.

பின்னர் டாக்டர் ராணியை பார்க்க அலெக்ஸாண்டர் சான்சீவ் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி வருங்கால கணவனை பார்க்க ராணியும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனிடையே அவரிடம் இருந்து ராணிக்கு அழைப்பு வந்தது, அதில் பேசிய அவர், டெல்லி விமான நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களுடன் தன்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்து விட்டதாகவும், பரிசு பொருட்களின் மதிப்புக்கு 40 சதவீதம் பணம் கட்டினால் மட்டும் தான் விடுவிப்பார்கள் என்றும், இல்லை என்றால் பரிசு பொருட்களுடன் தன்னையும் கைது செய்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

அதைகேட்டு ராணி அதிர்ச்சியடைந்தார். பிறகு அலெக்ஸாண்டர் சான்சீவ் செல்ேபானில் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று பேசி, ராணியிடம் அவரது பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2.87 கோடியை மிரட்டி பறித்துள்ளனர். அதன் பிறகு அலெக்ஸாண்டர் சான்சீவ் தனது இணைப்பு துண்டித்துவிட்டார். இதையடுத்து ராணிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதாரிடம் புகார் அளித்தார். அவர் நடவடிக்ைக எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார், ராணியின் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருங்கால கணவர் என்று பேசிய நபரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, மோசடி நபர்கள் தெற்கு டெல்லி, மேகாலயா, கேரளா, குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் போலியான முகவரியில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் என தெரியவந்தது.

வங்கி கணக்குகளில் இருந்து ஏடிஎம் மூலம் டெல்லியில் உள்ள உத்தம் நகர், மோகன் நகர் பகுதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான தனிப்படையினர் ெடல்லி சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன், பெண் டாக்டரிடம் திருமண ஆசை காட்டி ரூ.2.87 கோடி மோசடி செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி (29), சினேடு (36) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 7 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 40 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 2 மோசடி நபர்களையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post மேட்ரிமோனியல் மூலம் அமெரிக்க மாப்பிள்ளை என அறிமுகம் சுங்கத்துறையினர் பிடித்ததாக ஏமாற்றி பெண் டாக்டரிடம் ₹2.87 கோடி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: