சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயலகப் பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா, தென்னிந்திய மக்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றவர்கள் என்று அண்மையில் பேசியிருந்தார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் சாம் பிட்ரோடாவின் பேச்சை கண்டித்து தமிழக பாஜ சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் கரு.நாகராஜன், பாஜ மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜலட்சுமி, காயத்ரி தேவி, மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்பட நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டம் அருகே லேக் ஏரியாவில் திரண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜவினர் புறப்பட்டனர். அவர்களை அங்கேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 165 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

The post சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: