நெடுஞ்சாலையில் விதிகளை மீறி 15 ஆண்டாக சுங்கச்சாவடியில் பல ஆயிரம் கோடி முறைகேடு வசூல்?: ஒன்றிய அரசு மீது வாகன ஓட்டிகள் சரமாரி குற்றச்சாட்டு

கிருஷ்ணராயபுரம்: கரூர் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்க சாவடியில் விதி மீறி 15 ஆண்டாக சுங்க கட்டணம் வசூலித்து வாகன ஓட்டிகளை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை, மணவாசி ஆகிய இடங்களில் சுங்க சாவடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி சுங்கசாவடி வழியாக தினமும் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான கார், வேன், லாரி, பஸ், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் மூலம் தினமும் ரூ.10 லட்சம் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால் நான்கு வழிச்சாலையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் எனக்கூறப்படுகிறது. ஆனால் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் வரை இருவழி சாலையாக மட்டுமே உள்ளது. இதனால் மணவாசி மற்றும் திருப்பராய்த்துறை சுங்க சாவடியானது விதிமுறைகளை மீறி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கச்சாவடி அமைத்து பொதுமக்களிடம் இருந்து ஒன்றிய அரசு சுங்கவரி வசூலித்து வருகிறது.

இதனை கண்டித்து அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பினால் அவர்களை அடியாட்கள் வைத்து சுங்க சாவடி நிர்வாகத்தினர் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்நிலையில், கொங்குநாடு மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட பல வாகன ஓட்டிகள் கடந்த 8ம் தேதி சுங்க கட்டணம வசூலிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் மணவாசி சுங்க சாவடியில் சாலையின் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கேட்டு கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. விதிகளை மீறி 15 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

 

The post நெடுஞ்சாலையில் விதிகளை மீறி 15 ஆண்டாக சுங்கச்சாவடியில் பல ஆயிரம் கோடி முறைகேடு வசூல்?: ஒன்றிய அரசு மீது வாகன ஓட்டிகள் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: