புளியம்பட்டி திருத்தல பெருவிழாவில் புனித அந்தோனியார் தேர் பவனி

ஓட்டப்பிடாரம்: புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தல பெருவிழாவில், நேற்று தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். பாளை. மறைமாவட்டத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தல பெருவிழா, கடந்த ஜன.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட ஆயர் அந்தோனிச்சாமி தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பவனியாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. நேற்று முன்தினம் நற்கருணை பவனி நடந்தது. நேற்று (5ம் தேதி) சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர் பவனியும் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு அந்தோனியாரை தரிசித்தனர். இன்று காலை 11.45 மணிக்கு சிகர நிகழ்ச்சியாக பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணி முதல் சென்னை திசை ஜெரி, தூத்துக்குடி பிராங்களின், பாளை மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ், செயலக முதல்வர் ஞானப்பிரகாசம், பொருளாளர் அந்தோனிசாமி, பாளையஞ்செட்டிகுளம் பங்குதந்தை ஜோமிக்ஸ் ஆகியோரின் தலைமையில் திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு சேசு சபை அருட்தந்தையர்களின் சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

நாளை (7ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கொம்பாடி பங்குதந்தை லாசர் தலைமையில் நன்றி திருப்பலி, 6 மணிக்கு பாளை ஆயரின் செயலர் மிக்கேல்ராஜ் தலைமையில் கொடியிறக்க திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தல அதிபரும், பங்குதந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குதந்தை சந்தியாகு, ஆன்மீக தந்தைகள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட்
சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.

The post புளியம்பட்டி திருத்தல பெருவிழாவில் புனித அந்தோனியார் தேர் பவனி appeared first on Dinakaran.

Related Stories: