கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு ரூ.2.93 கோடி மோசடி செய்த அதிமுக மாஜி தலைவர் கைது: துணைத்தலைவரும் சிக்கினார்

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளரிவெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 3 ஆண்டுக்கு முன் அதிமுக ஆட்சி காலத்தில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. அப்போது, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல், செயலாளராக இருந்த மோகன், உதவி செயலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், வட்டார ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் ரத்தினம், கலாராணி, பெரியண்ணன் உள்ளிட்ட 13 பேர் ரூ.2.93 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வங்கியின் செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்தனர். இந்த மோசடி குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சங்ககிரி துணைப்பதிவாளர் முத்துவிஜயா புகார் அளித்தார். இதையடுத்து சத்தியபானு, வடிவேல், மோகன், மணி உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோகன் (56), மணி (57),ஆனந்தகுமார் (56) ஆகியோரை கடந்த ஜூலை 9ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுகவை சேர்ந்த மாஜி கூட்டுறவு வங்கி தலைவர் சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், உறுப்பினர்கள் ரத்தினம், கலாராணி, பெரியண்ணன் உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாகினர். இந்தநிலையில், இடைப்பாடி வெள்ளரிவெள்ளியில் பதுங்கியிருந்த அதிமுக மாஜி கூட்டுறவு வங்கி பெண் தலைவர் சத்தியபானு (45), துணைத்தலைவர் வடிவேல் (40) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் சேலத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு ரூ.2.93 கோடி மோசடி செய்த அதிமுக மாஜி தலைவர் கைது: துணைத்தலைவரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: