பொன்னேரியில் ரூ. 49.28 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்தார். பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றது. இந்த நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்குவதும், இட நெருக்கடி, பழங்கால கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், பஞ்செட்டியில் சுமார் 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில், இந்த இடத்தில் ரூ.49.28 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ள இடத்தில் ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டிட வரைபடங்களை காட்டி திட்டம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும், விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பொன்னேரியில் ரூ. 49.28 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் : உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: