பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள பொது கழிப்பிடம்: பயணிகள், ஊழியர்கள் கடும் அவதி

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று மாதங்களாக குளியல் அறைகளுடன் கூடிய பொது கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதால், இயற்கை உபாதைகள் கழிக்க வசதியின்றி பயணிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இங்கு பயணிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், பேருந்து நிலைய வியாபாரிகள் வசதிக்காக பேரூராட்சி சார்பில், குளியல் அறைகளுடன் கூடிய பொது கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வந்தது.

சமீபத்தில் சேதமடைந்திருந்த இந்த பொது கழிப்பிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, ரூ.4.50 லட்சம் மதீப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘பேருந்து நிலைய பொது கழிப்பிடம் மூடப்பட்டதால், பயணிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், பேருந்து நிலைய வியாபாரிகள் இயற்கை உபாதைகள் கழிக்க வசதியின்றி அவதிப்படுகின்றனர்.

வேறு வழியின்றி சிலர் பேருந்து நிலையத்திலேயே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகில் வாரச்சந்தை வளாகம், பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடங்களும் திறக்கப்படாமல் உள்ளன. தூய்மை உறுதிப்படுத்த கட்டப்பட்ட பொது கழிப்பிடங்கள் முறையாக பராமரிப்பின்றி வீணாகி, இயற்கை உபாதைகள் கழிக்க கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பேருந்து நிலைய பொது கழிப்பிடம் சீரமைப்பு பணிகள் முடித்து ஒப்பந்ததாரர் பேரூராட்சிக்கு இதுவரை உரிய ஆவணங்கள் சமர்பிக்காததால், காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் பொது கழிப்பிடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

The post பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள பொது கழிப்பிடம்: பயணிகள், ஊழியர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: