ஜெய்ஸ்வால் அபார ஆட்டம்: இந்தியா 6 விக்கெட்டுக்கு 336

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் ரஜத் பத்திதார் (30 வயது), இங்கிலாந்து அணியில் சோயிப் பஷிர் (20 வயது) அறிமுகமாகினர். ஜெய்ஸ்வால், ரோகித் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. ரோகித் 14 ரன் எடுத்து அறிமுக சுழல் பஷிர் பந்துவீச்சில் போப் வசம் பிடிபட்டார். அடுத்து ஜெய்ஸ்வால் – கில் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர். கில் 34 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால் – ஷ்ரேயாஸ் ஜோடி 90 ரன், ஜெய்ஸ்வால் – ரஜத் பத்திதார் ஜோடி 70 ரன், ஜெய்ஸ்வால் – அக்சர் படேல் ஜோடி 52 ரன் சேர்க்க, இந்திய ஸ்கோர் 300 ரன்னை கடந்தது. ஒரு முனையில் வீரர்கள் மாறிக் கொண்டே இருந்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். கர் பாரத் 17 ரன் எடுத்து ரெஹான் அகமது பந்துவீச்சில் பஷிர் வசம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்துள்ளது (93 ஓவர்). ஜெய்ஸ்வால் 179 ரன் (257 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்), ஆர்.அஷ்வின் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ரெஹான் அகமது, சோயிப் பஷிர் தலா 2, ஆண்டர்சன், ஹார்ட்லி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

The post ஜெய்ஸ்வால் அபார ஆட்டம்: இந்தியா 6 விக்கெட்டுக்கு 336 appeared first on Dinakaran.

Related Stories: