வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்குவங்கம்: வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி பின் அவர் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இத்தகைய கைது நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். ஹேமந்த சோரன் எனது நெருங்கிய நண்பர்; இந்த இக்கட்டான காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க அவருக்கு துணை நிற்பேன். இந்த முக்கிய போரில் ஜார்க்கண்ட் மக்கள் உரிய பதிலடி கொடுத்து வெற்றி பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

The post வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்: மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: