அமலாக்கத்துறையின் 7 மணி நேர விசாரணைக்கு பின் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா: கைதானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு

* புதிய முதல்வராக அமைச்சர் சம்பாய் சோரன் தேர்வு

ராஞ்சி: நில மோசடி வழக்கில் சிக்கிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் பின் இரவு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ஹேமந்த் சோரன் அவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் சோரன் கைதானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் நில மோசடி மூலம் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன், ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆஜராவதற்கு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடந்த 20ம் தேதி சோரனின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் இன்னமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. அவர் எங்கே சென்றார் என்பது தெரியாததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் காத்து நின்றனர். அதன் பிறகு 30 மணி நேரத்திற்குப் பிறகு ராஞ்சியில் நடந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டார். அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்தனர். அவர்கள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தப்படுவதை அறிந்த கட்சி எம்எல்ஏக்கள், தொண்டர்கள் சோரனின் வீடு அருகே குவிந்தனர். மாநில அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பன்னா குப்தா கூறுகையில்,‘‘ அதிகாரிகள் விசாரணைக்கு ஹேமந்த் சோரன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்’’ என்றார். மாநில வேளாண் துறை அமைச்சர் பதல் பத்ரலேக் கூறுகையில்,‘‘ கட்சி எம்எல்ஏக்கள்,தொண்டர்கள் ஹேமந்த்துக்கு தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

விசாரணை நடப்பதையொட்டி முதல்வரின் வீடு அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முதல்வர் வீட்டின் அருகே பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 8.30 மணிக்கு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு பின்னால் கட்சியின் எம்எல்ஏக்கள்,எம்பிக்களும் ஒரு பஸ்சில் சென்றனர். அங்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஹேமந்த் சோரன் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டார். புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சரான சம்பாய் சோரனை ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு சம்பாய் சோரன் கூறுகையில், ‘‘சட்டமன்றத்தில் ஜேஎம்எம் கட்சிக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளேன்” என்றார். இந்த நிலையில்,ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலால் ஜார்க்கண்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்ற ஈடி

ஏழு மணி நேர விசாரணைக்குப் பிறகு முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்பி மஹூவா மாஜி அளித்த பேட்டியில், ‘‘அமலாக்கத்துறை கஸ்டடியில் முதல்வர் சோரன் உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்பார். எங்களிடம் போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர்’’ என்றார்.

* ஹேமந்த் மனைவி முதல்வராக அண்ணி சீதா சோரன் எதிர்ப்பு

ஒருவேளை நில மோசடி வழக்கில் சிக்கி ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டால் அவரது மனைவியான கல்பனா சோரனை முதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், கல்பனாவை முதல்வராக்குவதற்கு ஹேமந்த் சோரனின் அண்ணன் மனைவி சீதா சோரன் எதிரப்பு தெரிவித்தார். ஜார்கண்ட், ஜமா சட்டபேரவை தொகுதி எம்எல்ஏவான சீதா சோரன், நேற்றுமுன்தினம் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. சீதா சோரன் கூறுகையில்,‘‘எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை எதிர்க்கவில்லை; கட்சியின் ஒற்றுமையை எப்போதும் ஆதரிக்கிறேன். ஆனால், கல்பனா சோரனை முதல்வராக்கும் முடிவை எதிர்ப்பேன். மேலும், ஷிபு சோரனுடன் இணைந்து தனது கணவர் கட்சிக்கு நிறைய பங்களித்துள்ளதாகவும், கட்சிக்காக நிறைய தியாகம் செய்துள்ளேன்’’ என்றார்.

* அமலாக்க துறை அதிகாரிகள் மீது ஹேமந்த் சோரன் புகார்

அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாக ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு சொகுசு கார், ரூ.36 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னை துன்புறுத்துவதாக ராஞ்சியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினருக்கான போலீஸ் நிலையத்தில் ஹேமந்த் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள எனது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தன்னுடைய புகழ் மற்றும் தான் சார்ந்த பழங்குடியின சமுதாய மக்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சோதனை நடத்தி உள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயல்களால் தானும் எனது குடும்ப உறுப்பினர்களும் பெரிதும் மன உளைச்சல் அடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். டெல்லியில் கைப்பற்றப்பட்ட கார், பணம் ஆகியவை தன்னுடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஹேமந்த் சோரன் புகார் அளித்துள்ளதை மாவட்ட எஸ்பி சந்தன் குமார் சின்கா உறுதிப்படுத்தினார்.

The post அமலாக்கத்துறையின் 7 மணி நேர விசாரணைக்கு பின் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா: கைதானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: