காந்தியடிகள் நினைவு நாள் அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் காந்தியடிகள் நினைவு நாளில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடந்தது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். மத நல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியடிகள் மத வெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ம் தேதி தமிழகம் முழுவதும் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். நாடு சந்தித்து வரக்கூடிய மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்து வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த திமுக மாவட்ட நிர்வாகிகளை கேட்டு கொண்டார். இதையடுத்து நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன், அன்பகம் கலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர். திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதி மொழி நிகழ்வில் பங்கேற்றனர். இதே போல தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

The post காந்தியடிகள் நினைவு நாள் அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: