கோவையில் ஜிபிஎஸ் வசதியுடன் நீலநிற டவுன் பேருந்து அறிமுகம்: பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதில், 7,614 சாதாரண மற்றும் மகளிர் கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள், சொகுசு பஸ்கள், விரைவு பஸ்கள் என 2,456 பஸ்களும் புறநகர், விரைவு என 8,628 பஸ்களும், மலைப்பகுதி 465, மாற்று பஸ்கள் 1,404 உள்பட மொத்தம் 20,127 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், 8 கோட்டங்களில் உள்ள பஸ்களை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பச்சை நிறத்தில் இருந்த பஸ்கள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் நிற பஸ்களின் சீட்களும் மாற்றப்பட்டு புதுமைப்படுத்தப்பட்டது.

இதன் தோற்றம், வசதி ஆகியவை பயணிகளை கவர்ந்துள்ளது. இந்தநிலையில், மாநகரில் மகளிருக்கு கட்டணமின்றி இயக்கப்படும் பஸ்களின் நிறம் மாற்றப்பட்டு புதுபொலிவுடன் வெளிர் நீல நிறத்திலான பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிர் நீலநிற மாநகர பஸ்களில் ஜிபிஎஸ், பேருந்து நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள், கூடுதல் இடவசதியுடன் கூடிய இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில், காந்திபுரம் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 602 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சிவப்பு நிறத்திலான சொகுசு பஸ்கள் 180. மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மகளிருக்கான இலவச பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன், பின் பாதிகளில் பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது இந்த வகையான பஸ்கள் வெளிர் நீல நிறத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக கோவைக்கு வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 6 பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய வெளிர் நீலநிற டவுன் பஸ்கள் தனியார் பஸ்களை விட ஸ்டைலாக இருப்பதாகவும் பஸ் இருக்கையும் பஸ்சின் உட்பகுதியில் போதிய இடவசதி இருப்பதாகவும் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் எளிதாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

 

The post கோவையில் ஜிபிஎஸ் வசதியுடன் நீலநிற டவுன் பேருந்து அறிமுகம்: பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: