கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ உச்சி மஹாகாளியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். ஒரு வார காலம் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கோவில் பூசாரிகளில் ஒருவர் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறுவது வழக்கம். இதனை காணவும், அருள்வாக்கு பெறவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முள் படுக்கை அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கோவில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு முள் படுக்கை அமைக்கப்பட்டது. முன்னதாக பத்ரகாளியம்மன் உச்சி மாகாளியம்மனுக்கு விரதம் மேற்கொண்ட பூசாரி ஜெயபால் சிறப்பு பூஜைகள் செய்தார். அதனைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க பூசாரி ஜெயபாலை பக்தர்கள் முள் படுக்கைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் முள் படுக்கையில் ஏறி அமர்ந்தும், படுத்தும் அருள் வந்து ஆடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதனைக் காணவும், அருள்வாக்கு பெறவும் சென்னை, கோவில்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி appeared first on Dinakaran.

Related Stories: