குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் கலைக் குழுவினருக்கு முதல் இடம்

டெல்லி: புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் அலங்கார வாகன கலைக் குழுவினருக்கு முதல் இடம் பிடித்துள்ளது. புதுதில்லியில் 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பின் போது பங்கு கொண்ட தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருதினை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

இன்று (30.01.2024) புதுதில்லி இராணுவ கன்டோன்மெண்டில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் அவர்கள் தமிழ்நாடு மாநிலத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருது மற்றும் பாராட்டுப் பத்திரத்தினை வழங்கினார். இவ்விருதினை தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சக இணைச்செயலாளர் அமிதாப்பிரசாத், இயக்குநர் எம்.பி.குப்தா மற்றும் சார்புச் செயலாளர் அசோக் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கடந்த 21.01.2024 அன்று குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்குபெறும் 16 மாநிலங்களுக்கிடையே புதுதில்லி ராணுவ வளாக ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் கலைக் குழுவினருக்கு முதல் இடம் appeared first on Dinakaran.

Related Stories: