75வது குடியரசு தின விழா கோலாகலம்

*கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்

*முதல்வர் ஜெகன் மோகன் பங்கேற்பு

*போலீசார் அணிவகுப்பு மரியாதை

திருமலை : ந்திர மாநிலம் முழுவதும் நாட்டின் 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஜயவாடாவில் நடந்த விழாவில் கவர்னர் அப்துல்நசீர் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் நேற்று 26ம் தேதி 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடந்த 75 வது குடியரசு தின விழாவில் கவர்னர் அப்துல்நசீர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பல்வேறு திட்டங்களின் கீழ் அலங்காரிக்கப்பட்டு வந்த ஊர்தி அணிவகுப்பை பார்வையிட்டார். மேலும், திறந்து ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதில், முதல்வர் ஜெகன் மோகன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் அப்துல்நசீர் பேசியதாவது: ஆந்திர மாநில அரசு 15 ஆயிரம் கிராம மற்றும் வார்டு செயலகங்கள் மூலம் பொது மக்களுக்கு அரசு சேவைகளை எளிதில் வீட்டில் இருந்தபடி பெறும் விதமாக செயல்படுத்தி வழங்கி வருகிறது. இந்த சேவைகளுக்காக 1.35 லட்சம் நிரந்தர செயலக ஊழியர்களையும் 2.66 லட்சம் தன்னார்வலர்களையும் கொண்ட அமைப்பை நிறுவியுள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ள 10,132 கிராம சுகாதார கிளினிக்குகள் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம்.
விவசாயிகளுக்காக 10,778 ரைத்து பரோசா மையம் அமைக்கப்பட்டு உரம், உள்ளிட்ட விவசாய பொருட்கள் கிடைக்க செய்துள்ளோம். பள்ளிகளில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துள்ளோம்.

மேலும், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு ரூ.17,805 கோடி செலவிட்டுள்ளது. அரசு நேர்மையுடன் செயல்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 75வது குடியரசு தின விழாவையொட்டி, 206 அடி உயர அம்பேத்கரின் சிலையை மாநில அரசு திறந்து வைத்துள்ளது. இது ஜனநாயகத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது. மாநிலம் முழுவதும் ஆட்சியில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். 26 புதிய மாவட்டங்கள், 26 புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் 16 காவல் கோட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

மக்களிடம் ஆட்சியை கொண்டு வந்துள்ளோம். ஜெகன்னா அம்மா ஓடி, ஜெகன்னா வித்யா தீவேனா, ஜெகன்னா வசதி தீவேனா என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆங்கில வழிக்கல்வி, சிபிஎஸ்இ, ஐ.பி பாடத்திட்டம், டிஜிட்டல் கல்வி என அரசு மாணவர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்ற முயற்சிக்கிறது. எங்கள் அரசாங்கம் வந்த பிறகு, 2 லட்சத்து 13 ஆயிரம் நிரந்தர அரசு வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் டி.ஜி.பி. ராஜேந்திரநாத், முதன்மை செயலாளர் ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதனையடுத்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதேபோல் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் அலுவலக மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழா விழாவில் செயல் அதிகாரி தர்மா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு அறங்காவலர் குழு தலைவர் பூமனா கருணாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பின்னர் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்களின் அணிவகுப்பு ஏ.வி.எஸ்.ஒ சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் சிறப்பாக பணி புரிந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த 39 அதிகாரிகள், 264 பணியாளர்கள், ஸ்விம்ஸ் ஊழியர்கள் 2 பேர், எஸ்விபிசி ஊழியர்கள் 7 பேருக்கு 5 கிராம் கொண்ட வெள்ளி டாலர் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இதனையடுத்து எஸ்.வி.இசை மற்றும் நாட்டியக் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் விஜிலென்ஸ் மோப்ப நாய் படை பொறுப்பாளர் ரமணா மேற்பார்வையில் மோப்ப நாயின் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல், அமைதியான பயிற்சி, தீ வளையம் தாண்டுதல், பொருட்களை கவனமாக பாதுகாத்தல், தப்பியோடிய சமூக விரோதிகளை கண்டறிந்து பிடிப்பது போன்றவை மோப்ப நாய் கொண்டு சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜெ.இ.ஒ.க்கள் சதா பார்கவி, வீரபிரம்மம், சிவி.எஸ்.ஒ. நரசிம்ம கிஷோர், நிதி அலுவலர் பாலாஜி, சி.இ.நாகேஸ்வர ராவ், டி.எல்.ஒ.வீரராஜு, கூடுதல் சி.வி.எஸ்.ஒ. சிவகுமார் ரெட்டி, சி.ஏ.ஒ. சேஷ சைலேந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் திருப்பதி எம்ஆர்பள்ளி காவலர் விளையாட்டு மைதானத்தில் 75வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் வெங்கட ரமணாரெட்டி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி, தேசிய கீதம் பாடி, திறந்த வாகனத்தில் சென்று காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் விளக்கும் வீட்டு கட்டுமானத் துறை, மருத்துவ சுகாதாரத் துறை, கல்வித் துறை, அறநிலைய துறை, பொது விநியோகம், காவல் துறை, ரோந்து மற்றும் பால்கன் வாகனங்களின் அணிவகுப்புகள் நடந்தது.

இதில் முதல் பரிசை கல்வித் துறையும், இரண்டாம் பரிசை வீட்டு வசதித் துறையும் பெற்றன. தொடர்ந்து நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் கவுரவிக்கப்பட்டார். மேலும், பணியில் சிறந்து விளங்கிய காவலர்கள் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை ஆட்சியர் சுபம் பன்சால், நகராட்சி ஆணையர் ஹரிதா, எஸ்பி பரமேஷ்வர், டிஆர்ஓ பென்சல கிஷோர், திருப்பதி ஆர்டிஓ நிஷாந்த் ரெட்டி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், முதியோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மகளிர் குழுக்களுக்கு ₹2.72 கோடி கடன்களும், மெகா காசோலைகளும் வழங்கப்பட்டது.

சித்தூர்: சித்தூர் காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர்பேசியதாவது:ஆந்திர மாநில அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது.

ஜெகன் அண்ணா ஆர்யா கேஸ் ஸ்ரீதிட்டத்தின் கீழ் 32 மண்டலத்தில் 44 வாகனங்கள் அமைக்கப்பட்டது. 56 சுகாதார மையங்களில் 495 முறை இலவச சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 698 பேர் இலவச சிகிச்சை பெற்று பயனடைந்தார்கள். அதேபோல் ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் 3,255 நோய்களுக்கு கடந்த ஆட்சியில் காப்பீடு தொகை ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.25 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 473 பேருக்கு அடையாளம் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெகன் அண்ணா மத்திய உணவு திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 20,046 பள்ளிகளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 51 பேர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 1,670 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கலெக்டர் மோகன், எஸ்பி ரிஷாந்த் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

அதனைதொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், இணை கலெக்டர் ஸ்ரீனிவாஸ், ஆர்டிஓ ராஜசேகர், ஜில்லா பரிஷத் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர், நகர டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி, உள்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post 75வது குடியரசு தின விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: